கேப்டன் பிரபாகரன் பட இயக்குநர் ஆர்.கே. செல்வமணி உருக்கம் சென்னை: 'கேப்டன் பிரபாகரன்' படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், விஜயகாந்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “கேப்டன் விஜயகாந்த் மறைந்துவிட்டார் என்ற செய்தி, என்னை மிகப்பெரிய துயரத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாக்கியுள்ளது. விஜயகாந்தின் இறுதி நிகழ்ச்சிக்குகூட கலந்து கொள்ள முடியாத அளவிற்கு என் உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறேன்.
உடல் பிரச்னை காரணமாக அவரின் இறுதிச்சடங்கை தொலைக்காட்சியில் பார்ப்பதற்குகூட மருத்துவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. சாதாரண செல்வமணியாக இருந்த என்னை, ஆர்.கே.செல்வமணியாக உலகம் முழுக்க தெரிய செய்ததில் கேப்டனுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. விஜயராஜ் என்கிற சிறந்த மனிதரை, விஜயகாந்த் என்கிற நல்ல மனிதரை, கேப்டன் என்கிற உன்னதமான தலைவனை இந்த தமிழகம் இழந்துவிட்டது.
நான் கடைசியாக அவரின் பிறந்தநாள் அன்று பார்க்கச் சென்றபோது, என்னுடைய கைகளை இறுக பற்றிக்கொண்டு அமைதியாக பார்த்தார். அந்த பார்வையில் ஆயிரம் அன்பும், சொல்ல முடியாத விஷயங்களும் இருந்தது. கேப்டன் என பெயர் வைத்த செல்வமணியைக் காணவில்லை என நிறைய பேர் சொல்வதைப் பார்த்து இன்னும் துயரமாக இருந்தது. மன்னித்து விடுங்கள்” என வேதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அஸ்தமனமானது கருப்புச் சூரியன்.. திரளான தொண்டர்கள் கண்ணீர்!