தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மீண்டும் இணைந்த கலகலப்பான கூட்டணி - இயக்குநர் சுந்தர்.சி-யின் படத்தின் டைட்டில் வெளியானது! - அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்

தன்னை அப்டேட் செய்துகொண்டு எப்போதும் முன்னணி இயக்குனர்கள் வரிசையிலேயே தன்னை தக்கவைத்து கொண்டிருப்பவர் தான், இயக்குநர் சுந்தர்.சி.;இவர் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது.

மீண்டும் இணைந்த கலகலப்பான கூட்டணி! இயக்குனர் சுந்தர்.சி-யின் படத்தின் டைட்டில் வெளியானது..!
மீண்டும் இணைந்த கலகலப்பான கூட்டணி! இயக்குனர் சுந்தர்.சி-யின் படத்தின் டைட்டில் வெளியானது..!

By

Published : Jun 6, 2022, 6:19 PM IST

சென்னை: காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்துகொண்டு எப்போதும் முன்னணி இயக்குநர்கள் வரிசையிலேயே தன்னை தக்கவைத்துக்கொண்டிருப்பவர் இயக்குநர் சுந்தர்.சி. கவலைகளை மறந்து குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தபடி கலகலப்பான படம் பார்க்க வேண்டும் என்றால் அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் இயக்குநர் சுந்தர்.சியின் படங்கள்தான்.

முழுநீள காமெடி படங்கள் என்றாலும் சரி; ஹாரர் படங்கள் என்றாலும் சரி அனைத்துமே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டருக்கு அழைத்து வரக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைந்திருக்கும்.

அந்த வகையில் அரண்மனை-3 படத்திற்குப்பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் காபி வித் காதல். குஷ்பூவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள் நடிக்க, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும் முக்கியக் கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ’உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படம், ஊட்டியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வகையில் தற்போது இந்தப் படமும் சென்னையில் தொடங்கி ஊட்டியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்தப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 75 நாட்கள் நடைபெற்றுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மொத்தம் 8 பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளது.மேலும் இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்கிறார்.

ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரர்கள் அவர்களுக்குள் ஒத்துப்போகாத வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறார்கள். இசையமைப்பாளராக ஒருவன், ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவன் , சமையல் வேலையில் ஆர்வம் உடைய ஒருவன். அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்தி இந்த படத்தில் சுந்தர்.சி. தனது பாணியில் கலகலப்புடன் கூறி இருக்கிறார்.

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஜூலை மாதம் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க:சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்?

ABOUT THE AUTHOR

...view details