சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மலேசியா சென்றுவிட்டு நேற்று சென்னை திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் மலேசியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்தார். இது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது x பக்கத்தில் ரஜினியுடன் நடந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் ஆசிய அளவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ரஜினிகாந்தை மலேசியா பிரதமர் வரவேற்ற போது மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் சிவாஜி படத்தில் ரஜினி செய்யும் மொட்டை பாஸ் ஸ்டைலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கக்கூடிய படங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
முன்னதாக ஜெயிலர் படத்தின் வெளியீட்டின் போது ரஜினிகாந்த் இமயமலை பயணம் மேற்கொண்டார். பின்னர் உத்தர பிரதேசம் சென்ற ரஜினி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலரை சந்தித்தார். அப்போது யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.