ஐதராபாத்: தமிழ் சினிமாவில் மொத்தம் நான்கே படங்கள், அதில் 3 வெற்றிப் படங்கள் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர் இயக்குநர் நெல்சன். தற்போது நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படம் உலக அளவில் மாபெரும் வெற்றியைக் கண்டது.
மேலும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். மேலும், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் யு/ஏ சான்றிதலுடன் வெளியான இப்படம் உலகம் முழுவதும் உள்ள சுமார் 7 ஆயிரம் திரையரங்களிலும், தமிழ்நாட்டில் மட்டும் 1200 திரையரங்கில் வெளியானது.
படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாடு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், பல நிறுவனங்கள் டிக்கெட்டும் கொடுத்தும் விடுமுறையும் அளித்தது. ஆக்ஷன், ஸ்டைல், காமெடி என பல கலவையான வெளியான ஜெயிலர் திரைப்படம் முதல் நாளிலேயே எதிர்பாராத அளவிற்கு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கல்லா கட்டியது எனலாம். முதல் நாள் வசூல் மட்டும் சுமார் 20 கோடியைத் தாண்டியதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.