ஒய்ஜி மகேந்திரனின் சாருகேசி நாடக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு சென்னை: தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் "சாருகேசி" நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த சாருகேசி நாடகத்தில் நடித்த கதாபாத்திரங்களை ரஜினிகாந்த் கௌரவித்தார். தொடர்ந்து மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "சாருகேசி நாடகம் விரைவில் திரைப்படமாக உருவாக உள்ளது.
கடந்த 47 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மயிலாப்பூரில் ‘ரகசியம் பரம ரகசியம்’ நாடகம் பார்க்கச் சென்ற நான், அரை மணி நேரம் காத்திருந்தும் நாடகத்திற்குள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஆனால், காலம் ஒருவரை எங்கிருந்து எப்போது எங்கு கொண்டு போகும் என தெரியாது. அதை மகா காலம் என்று சொல்வார்கள்.
அவ்வாறு 50வது விழாவில் தலைமை விருந்தினராக வந்திருக்கிறேன் என்றால், எல்லாம் அந்த காலத்தின் விளையாட்டு. ஜெயலலிதா, நாகேஷ், சோ, விசு போன்றவர்கள் ஒய்ஜிபி (YGP) நாடகக் குழுவில் இருந்து வந்தவர்கள். பாதுகாப்பும், கண்ணியமும் மிக்க நாடகக் குழுவினராக திகழ்கிறார்கள் என்பது பெருமிதம் அளிக்கிறது.
சிவாஜி கணேசன் தற்போது இந்த நாடகத்தை பார்த்திருந்தால், எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பார் என்பதை யூகிக்கவே முடியாது. இந்த நாடகத்தைப் படமாக எடுக்கும்போது, நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒய்.ஜி.மகேந்திரனுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியாது.
என் மனைவி லதாவை எனக்கு அறிமுகப்படுத்தியவர், ஒய்ஜிஎம்தான். இன்று நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமே என் மனைவிதான். கெட்ட சிநேகிதர்களால் கெட்ட பழக்கங்கள் வைத்துக் கொண்டவன் நான். நடத்துனராக இருந்தபோதே எவ்வளவு பாக்கெட் சிகரெட் அடித்தேன் என்றே தெரியாது. காலையிலேயே பாயா, ஆப்பம், சிக்கன் 65 என சாப்பிடுவேன்.
சிகரெட், மது மற்றும் அசைவ உணவு என மூன்றையும் சேர்த்து சாப்பிடுபவர்கள், 60 வயதுக்கு மேல் வாழ்ந்ததே கிடையாது. இப்படிப்பட்ட பழக்கம் கொண்ட என்னை அன்பால் மாற்றியவர் லதா. என்னை ஒழுக்கமாக மாற்றி இருக்கிறார். நடத்துனராக இருக்கும்போது தினமும் மது குடிப்பேன், சிகரெட் பிடிப்பேன், நாள்தோறும் 2 முறை மாமிசம் சாப்பிடுவேன். சைவப் பிரியர்களை பார்த்தால் அப்போது எனக்கு பாவமாக தெரியும்" என்றார்.
இதையும் படிங்க:மாய கண்ணனாக மாறிய மஞ்சு வாரியரின் புகைப்பட தொகுப்பு!