சென்னை: கடந்த மாதம் 30ம் தேதி சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் தங்கள் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இப்படத்தில் ஏஆர் ரகுமானின் இசை கூடுதல் சிறப்பினை பெற்றுத்தந்துள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்மையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
தற்போது வரை திரையரங்குகளில் இரண்டாவது வாரமாக ஓடி வருகிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றி குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,“எங்களின் 'பத்து தல' திரைப்படம் தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 500 திரையரங்குகளிலும் இன்று இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது.
எங்களின் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து இவ்வளவு அமோக வரவேற்பு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்காக, சிலம்பரசன் (STR) ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு முழு மனதுடன் எங்களது நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறோம். படம் குறித்துப் பாராட்டி அதை உயர்த்திய விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
'பத்து தல திரைப்படம் சிலம்பரசனின் கரியரில் அதிக வருவாயை ஈட்டிய ஒரு படமாக மட்டுமல்லாமல், எங்களின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரும் லாபம் தந்திருக்கக்கூடிய படமாகவும் அமைந்ததுள்ளது. சிலம்பரசன் (STR) இந்தப் படத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து, அவரது சிறப்பான ஆதரவைக் கொடுத்து உதவியுள்ளார். குறிப்பாக இசை வெளியீட்டு விழா மற்றும் புரோமோஷன்களின் போது கலந்து கொண்டு படத்திற்கு ஒரு பெரிய கவன ஈர்ப்பைக் கொண்டு வந்து படம் பல வழிகளில் வெற்றிபெற உதவியதற்காக அவருக்கு எங்களது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறோம்.
இதனைத்தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மானுக்கு எங்களது சிறப்பு நன்றி. ரஹ்மான் சார் தனது பிஸியான ஷெட்யூலுக்கு மத்தியில் எங்கள் படத்திற்கு எல்லா வகையிலும் ஆதரவு அளித்து, பல வாரங்களாக முதலிடத்தில் இருக்கும் சார்ட்பஸ்டர் பாடல்களைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் அருமையான பின்னணி இசையைக் கொடுத்ததோடு மட்டுமின்றி இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மற்றும் புரோமோஷன்களில் ஒரு பகுதியாக இருந்தது படத்திற்குப் பெரிதும் உதவியது.
திரைப்படத்தின் இந்த மூன்று வருட பயணத்தில் தனது உற்சாகத்தைத் தக்கவைத்து, அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில், தரமான கமர்ஷியல் எண்டர்டெய்னரை கொடுத்த இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். மேலும் படத்தின் பல்வேறு உரிமைகளைச் சிறந்த விலையில் விற்க, படத்தின் மீதான அவரது ஈடுபாடும், அர்ப்பணிப்பும் இந்தப் படம் சுமுகமாக முடிந்து வெளிவருவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தது.