சென்னை:உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சர் த்ரில்லராக உருவாகியுள்ள ‘தி கோட் லைஃப் (The Goat Life)’ திரைப்படம் ஏப்ரல் 10, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் தமிழில் ‘ஆடுஜீவிதம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
விஷுவல் ரொமான்ஸ் தயாரிப்பில், தேசிய விருது வென்ற பிளெஸ்ஸி இயக்கியுள்ள ‘தி கோட் லைஃப்’ ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், அமலா பால், கே.ஆர்.கோகுல் மற்றும் பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக்காபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். தரமான தயாரிப்பு, அழகியல் கூறுகள், கதை சொல்லல், மற்றும் நடிகர்களின் நடிப்புத் திறமை, ஆன்மாவைத் தூண்டும் பின்னணி இசை ஆகியவற்றுடன் இப்படம் பிரம்மாண்ட திரையரங்க அனுபவத்தைக் கொடுக்க உள்ளது.
மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.