சென்னை: இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தியின் ஜப்பான், லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விக்ரம் பிரபுவின் ரெய்டு, காளி வெங்கட்டின் கிடா ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன.
ஜப்பான்: நடிகர் கார்த்தி - இயக்குநர் ராஜு முருகன் கூட்டணியில் 'ஜப்பான்' திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை ஜோக்கர் படத்தை இயக்கிய ராஜுமுருகன் இயக்கியுள்ளார். ஜப்பான் திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நவம்பர் 10ஆம் தேதி (நாளை) வெளியாகிறது.
'ஜப்பான்' திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25வது படம் என்பதால் மிக அதிக பொருட்செலவில் தயாராகி உள்ளது. அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கார்த்தி நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்த படமும் அந்தப் பட்டியலில் சேரும் என படக்குழு நம்பிக்கை வைத்துள்ளது. இது ராஜு முருகனின் கமர்ஷியல் படமாக இருந்தாலும் அவரது படங்களில் வரும் சமூகம் சார்ந்த விஷயங்களும் இப்படத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லக்ஷ்மி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றது.
தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் இப்படத்திற்கு கிடைத்த நிலையில், 8 வருடத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி உள்ளார். இந்த படமும் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய படங்களில் அவரது நடிப்பு மிகப் பெரிய வரவேற்பு பெற்றதுடன் அப்படங்களின் வெற்றிக்கு அதுவே முக்கிய காரணமாக அமைந்தது எனலாம். கார்த்திக் சுப்பராஜ் படங்களில் உள்ள பொதுவான விஷயங்கள் இப்படத்திலும் உள்லது என்பதை ஜிகர்தண்டா படத்தின் டிரெய்லர் உணர்த்துகிறது.
ரெய்டு: அறிமுக இயக்குநர் கார்த்தி இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் ரெய்டு திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த 'ரெய்டு' படத்திற்கு பிரபல இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா மற்றும் புதுமுகம் அனந்திகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 6 வருடங்களுக்கு பிறகு நடிகை ஸ்ரீ திவ்யா இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சாம் சி எஸ் இசையமைத்துள்ள இந்த படமும் நவம்பர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. விக்ரம் பிரபு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும் கதை தேர்வில் தவறவிடுகிறார் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. அந்த குறையை ரெய்டு திரைப்படம் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
கிடா:ரா.வெங்கட் இயக்கத்தில் மறைந்த நடிகர் பூ ராமு மற்றும் காளி வெங்கட் நடித்துள்ள கிடா என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. தாத்தா, பேரன் பாசப்பிணைப்பை வைத்தும், கிடாயை மையக்கருவாக வைத்தும் இந்த கிடா திரைப்படம் உருவாகி உள்ளது. சிறு பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள கிடா திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் நடிகர் பெரியகருப்புத் தேவரின் பேரனும், இயக்குநர் விருமாண்டியின் மகனுமான தீபன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அழகான கிராமத்து கதையாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
லேபில்: அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய், தான்யா ஹோப், ஸ்ரீமன், மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள லேபில் இணையத் தொடர் ஹாஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. வட சென்னையை மையமாக வைத்து 10 எபிசோட் கொண்ட இணைய தொடராக இது உருவாகியுள்ளது. நாளை வெளியாகும் படங்களில் எந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க:கேஜிஎஃப் படத்திற்கு முன்பு நடிகர் யாஷ் உடைய நட்சத்திர அந்தஸ்து..! அல்லு அரவிந்த் கருத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு!