சென்னை: மாப்ளே லீப் புரொடக்சன்ஸ் & பல்ஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் இயக்குநர் கணேஷ் பாபு தயாரித்து இயக்கியுள்ள படம் கட்டில். இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற கட்டில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் கணேஷ் பாபு, கே.எஸ். ரவிக்குமார், மோகன் ராஜா, நடிகை சிருஷ்டி டாங்கே, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாடலாசிரியர்கள் வைரமுத்து, மதன் கார்க்கி மற்றும் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் பேசுகையில், ”வைரமுத்துவுக்கு முன் பேச வேண்டும் என்று தமிழ்த்தாயை வேண்டி கொண்டேன். ஏனென்றால் வைரமுத்து 7 முறை தேசிய விருது வாங்கியவர். வைரமுத்து உடனான பயணம் நாட்டாமை படத்தில் துவங்கியது. ஸ்ரீகாந்த் தேவா வந்தாலே எனர்ஜி வந்து விடும்” என்று படக்குழுவினரை பாராட்டி பேசினார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், ”இந்த படத்தில் ஒரு பாடல் பண்ணிருக்கிறேன். கட்டிலை ரொம்ப அழகாக, பல தலைமுறை தாண்டிய உறவாக சொல்லி இருக்கிறார் இயக்குநர். கட்டிலை மையமாக வைத்து காதல் கதையும் அழகாக சொல்லி இருக்கிறார் கணேஷ் பாபு. அப்பாவின் வரிகளை பார்த்து தான் பாடல் எழுதக் கற்றுக் கொண்டேன். அப்பாவுடன் இணைந்து சில படங்களில் தான் பாடல் எழுதியிருக்கிறேன், அதற்கு இயக்குநருக்கு நன்றி. கட்டில் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகை சிருஷ்டி டாங்கே பேசுகையில், ”இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க சொன்னார்கள். முதலில் அம்மாவாக சொல்லும் போதே யோசித்தேன். ஆனால் ரசிகர்களுக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இயக்குநர் கணேஷ் பாபுவுடன் வேலை செய்தது நல்ல அனுபவமாக இருந்தது” என கூறினார். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், ”ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வைரமுத்து வரிகளில் 3 பாடல்கள் பண்ணியதே பெரிய பாக்கியம். இந்த படம் குடும்ப கதையாக நிச்சயமாக வெற்றி பெறும்” என்றும் கூறினார்.