சென்னை: ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ் பாஸ்கர் நடித்துள்ள திரைப்படம் பார்க்கிங். இந்த படத்தை பாஷன் ஸ்டூடியோஸ் ( passion studios) தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்கிறார். இந்த படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (நவ.25) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரவிக்குமார், ரத்னகுமார், அருண் ராஜா காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் ஹரிஷ் கல்யாண் பேசுகையில்,“ இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. லோகேஷ், அருண் காமராஜ் போன்றவர்கள் படத்தைப் பார்த்து விட்டு சொன்ன ரிவ்யூ தான் எங்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் வில்லத்தனமான கதாபாத்திரம் ஏற்றுக் கொண்டார்கள்.
எல்லோருக்குள்ளும் சின்ன ஈகோ, வில்லத்தனம் இருக்கும். அதை எப்போது எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பது தான். ஒரு காட்சியில் நான் எம்.எஸ் பாஸ்கரின் கன்னத்தில் அறைவது போன்று இருக்கும். அந்த மாதிரி காட்சியில் உடன் நடிப்பவரின் நிலையைப் புரிந்து கொண்டு நடிக்கும் நடிகர் எம்.எஸ் பாஸ்கர். நல்ல கன்டென்ட்டுடன் வருகிறோம். பார்த்து ஆதரவு தாருங்கள்” என்று கூறினார்.
நிகழ்ச்சி மேடையில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த படம் பார்த்து விட்டேன். பெரிய பிளாக் பஸ்டருக்கான எல்லா வைப் (vibe) இந்த படத்தில் இருக்கிறது. பார்க்கிங் பிரச்சினை எல்லாராலும் கனெக்ட் பண்ண முடியும் என்று நினைக்கிறேன்.
மலையாள படங்களில் அய்யப்பனும் கோஷியும், டிரைவிங் லைசென்ஸ், படங்களைப் போல இருவருக்குமான ஈகோ யுத்தம் தான் படம். எனக்கொரு பெரிய ஆசை எம்.எஸ் பாஸ்கருடன் சேர்ந்து பயணிக்க விரும்புகிறேன். அது சீக்கிரம் நடக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
நிகழ்ச்சி மேடையில் எம்.எஸ்.பாஸ்கர் பேசுகையில்,“இயக்குநர் இந்த கதையைச் சொன்னார். பார்க்கிங் பிரச்சினை என்பது எல்லா இடங்கள் மற்றும் பொது இடங்களில் கூட இருக்கிறது. நான் வைத்திருப்பது பெரிய வாகனம். எங்கள் அபார்ட்மென்டிலேயே ஒருவர் கார் வைப்பதற்கு இடம் எவ்வளவு இருக்கிறது என்று கேட்டார்.
அந்த பார்க்கிங் என்பது எல்லாருக்கும் இருக்கும் பிரச்சினையாக அதை கதையாக எடுத்து அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தில் ஹீரோ கார் வாங்கும் வரை ஜாலியாக இருப்பேன். ஆனால் கார் வாங்கிய பிறகு கோபமாக தான் இருப்பேன். நான் சிவாஜி அப்பாவின் வெறியன். அண்ணன் கமல் பக்தர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னுடன் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக சொன்னார். அது பெரிய வார்த்தை. எங்கள் அண்ணாவை ( கமல்ஹாசன்) இயக்கி விட்ட உங்களோடு பயணிக்க நான் விரும்புகிறேன். ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
அதே மாதிரி தளபதி விஜய்யும் வைத்து இயக்கி விட்டீர்கள். நீங்கள் வயதில் என்னை விட இளையவராக இருந்தாலும், நீங்கள் பெரும்புகழ் பெற்றவர். பெறப்போகிறவர் நீங்கள் கூப்பிடுங்கள் வருகிறேன். பார்க்கிங் பிரச்சினை என்பதால் ஷூட்டிங்கிற்கும் நேரத்துக்கு வந்து விடுவேன் என்றும் ஜாலியாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சி மேடையில் இயக்குநர் அருண் காமராஜ் பேசுகையில், “இந்த படம் பார்த்து விட்டேன். எம்.எஸ் பாஸ்கர் ஒரு ஈவிலாக நடித்து உள்ளார். அது தான் அவர் திரையுலக அனுபவம். தனது கதாபாத்திரத்திற்கு 100 சதவீதம் உழைப்பை கொடுத்துள்ளார் எம்.எஸ் பாஸ்கர். இந்த படம் பெயர் சொல்லக்கூடிய படங்களில் ஒன்றாக, இந்த ஆண்டில் முக்கியமான படமாக இருக்கும். இது மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள். நண்பனுக்கு இங்கு நிற்பதில் பெருமை கொள்கிறேன்” என்று கூறினார்.
நிகழ்ச்சி மேடையில் இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசுகையில்,“டிரெய்லரைப் போல படமும் உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். டிசம்பர் 1 படம் வெளியாகும் போது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். உலகத்தில் எல்லோருக்கும் ஈகோ இருக்கும். வில்லன் ஸ்ட்ராங்கா இருந்தால் படம் ஹிட் ஆகும் என்று நினைப்பார்கள். இந்த படம் எதாவது ஒரு பாயிண்ட்டில் உங்களை அடையாளம் காட்டும் எனக் கூறினார்.
இதையும் படிங்க:"அந்த மனசுதான் சார் கடவுள்".. சமூக வலைத்தளத்தில் உதவி கேட்ட நபருக்கு உதவிய ஜி.வி பிரகாஷ்.. குவியும் பாராட்டுகள்!