சென்னை: தமிழ் சினிமாவின் மைக்கெல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதலன். மேலும் காதலன் படத்தில் வடிவேலு, நக்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ஏ.ஆர். ரகுமான் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக பேட்ட ராப் என்ற ராப் பாடல் 90ஸ் தலைமுறையினர் முதல் தற்போது வரை பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர், நடன இயக்குநர், திரைப்பட இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு 'பேட்ட ராப்' என்று பெயரிடப்பட்டுள்ளது. பரபரப்பான, கலகலப்புடன் கூடிய நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் மிக்க திரைப்படமாக இது உருவாக உள்ளது.
புளூ ஹில் பிலிம்ஸ் பேனரில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இப்படம் சென்னையில் பூஜையுடன் துவங்கியது. ஜூன் 15ஆம் தேதி புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்படத்தில் பிரபல நடிகை வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார். 'தேரு' (2023) மற்றும் 'ஜிபூட்டி' (2021) போன்ற மலையாளப் படங்களை எஸ் ஜே சினு இப்படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மாமன்னன் இசை வெளியீட்டு விழா: தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு?