இந்தியாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அவரது கனவுப் படமாக உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவானது பொன்னியின் செல்வன். வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆழ்வார்கடியான் நம்பியாக ஜெயராம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருந்தார். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. பொன்னியின் செல்வன் நாவல் படித்தவர்களும், படிக்காதவர்களும் படத்தை பார்த்து வியந்து பாராட்டினர்.
படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் பேசப்பட்டது. மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை பொன்னியின் செல்வன் படைத்தது.
அதுமட்டுமின்றி இந்த படத்தின் முதல் பாகமே, படத்தின் பட்ஜெட்டை மீறி வசூலித்து உள்ளது. இப்படம் 150 நாட்களில் இரண்டு பாகத்திற்குமான படப்பிடிப்பு முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதல் பாகம் இமாலய வசூல் சாதனை படைத்துள்ளதால் இரண்டாம் பாகத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.