சென்னை: அமரர் கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுத்துள்ளார். முதல்பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியானது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
படத்தைப் பார்த்த பலரும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நிறைய புனைவுகளை கொண்டுள்ளதாகவும், மணிரத்னம் வரலாற்றை மாற்றி காட்டியுள்ளார் என்றும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும் பொன்னியின் செல்வன் கதையின் இறுதி முடிவை மாற்றி, படத்தில் இயக்குநர் வேறு விதமாக காட்சிப்படுத்தியுள்ளார் எனக்குற்றச்சாட்டு எழுந்தது. அது மட்டுமின்றி சோழர்களின் வரலாற்றைத் தவறாக சித்தரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு நல்ல வசூல் பெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பொன்னியின் செல்வன் 2 குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, ''பொன்னியின் செல்வன் 2வை விட எனக்கு பொன்னியின் செல்வன் முதல் பாகம் தான் பிடித்திருந்தது. இரண்டாம் பாகத்தில் மேக்கிங் மற்றும் அழகியல் அழகாக காட்டப்பட்டுள்ளது.
ஆனால், சோழர்களின் வீரம், பெருமை காட்டப்படாதது எனக்கு வருத்தமாக உள்ளது. பொன்னியின் செல்வனான அருள்மொழி வர்மனை பற்றி அதிகமாக சொல்லவில்லை. அவரின் பெருமைகளைப் பற்றியும் அவரது வாழ்க்கை முறை பற்றியும் குறைவாக காட்டப்பட்டுள்ளது. மக்களும் இதே கருத்தைத் தான் சொல்கின்றனர். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலே நிறைய புனைவுகள் நிறைந்தது.