Thangalaan: ஹைதராபாத்:பா.ரஞ்சித்தின் 'தங்கலான்' படத்தின் மேக்கிங் வீடியோவை சீயான் விக்ரமின் பிறந்த நாளான இன்று (ஏப்.17) படக்குழு வெளியிட்டுள்ளது.
வெளி உலகிற்கு சொல்லப்படாமல் இருந்த பல சமூக அவலங்களை தனது அசாத்தியமான தனித்துவமிக்க படைப்புகளாக சினிமாவில் கொண்டு வந்து எளியவர்களின் வலிகளை அனைவருக்கும் உணர்த்தியவர் இயக்குநர் பா.ரஞ்சித். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக சிறந்து விளங்கும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் இயக்குநர் ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது.
பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி, மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு புதிய Genre-யை உருவாக்கி உள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு, சீயான் விக்ரம் பா.ரஞ்சித் இயக்கும் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது, பா.ரஞ்சித் மற்றும் சீயான் விக்ரம் ஆகியோரின் கூட்டணியில் நடந்து வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நிறைவை எட்டியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிப்பது இதுவே முதல்முறை என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் நாளுக்குநாள் எகிறியவாறே உள்ளன.