சென்னை:இசையமைப்பாளர் அனிருத், தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் உலகளவில் ஹிட்டடித்தது. அதனை தொடர்ந்து நிறைய வெற்றிப் பாடல்களை கொடுத்து வந்தவர், முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.
ரஜினி, அஜித், விஜய், கமல் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்கள் என்றாலே அனிருத் தான் இசையமைப்பாளர் என்றானது. ஒருபுறம் வெற்றிப் பாடல்கள் பல கொடுத்தாலும், மறுபுறம் இவர் நிறைய வெளிநாட்டு பாடல்களை காப்பி அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. குறிப்பாக கத்தி படத்தில் வந்த தீம் மியூசிக் காப்பி என்று கூறப்பட்டது. வேதாளம் உள்ளிட்ட படங்களிலும் இவரது பாடல்கள் காப்பி அடிக்கப்பட்டவை என்று ரசிகர்களால் பேசப்பட்டது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் படம் லியோ. இப்படம் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்த நிலையில் தற்போது அனிருத் மூலம் மற்றொரு சர்ச்சையும் எழுந்துள்ளது. அனிருத் இசையில் இந்த படத்தில் இருந்து ஆர்டினரி பெர்சன் (ordinary person) என்ற பாடல் வெளியிடப்பட்டது.
இந்த பாடல் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடல் பல்கேரிய நாட்டின் ஒட்னிக்கா என்ற இசைக்கலைஞர் இசையில் உருவான வேர் ஆர் யூ என்ற பாடலின் காப்பி என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இது குறித்து அவரை டேக் செய்து ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் என்ன நடக்கிறது என்று புரியாமல் ஒட்னிக்கா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.