சென்னை: கோலிவுட்டில் இந்த வாரம் பல்வேறு மொழித் திரைப்படங்கள் வெளியாகிறது. ஷாருக்கான் நடித்துள்ள டன்கி, மோகன்லால் நடிப்பில் நெரு, அக்வாமேன் உள்ளிட்ட படங்கள் நாளை (டிச.21) வெளியாகிறது. பிரபாஸ் நடிப்பில் சலார், அசோக் செல்வனின் சபா நாயகன், நடிகை ரேகா நடித்துள்ள மிரியம்மா, விதார்த் நடித்துள்ள ஆயிரம் பொற்காசுகள், ஜிகிரி தோஸ்த், அரணம் உள்ளிட்ட 6 படங்கள் நாளை மறுநாள் (டிச.22) வெளியாகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு அக்வாமேன் என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அதன் இரண்டாம் பாகமான டிசி யுனிவர்ஸின் 'அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம் (Aquaman and the last kingdom)' பெரும் எதிர்பார்ப்போடு நாளை திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளது.
டன்கி (dunki): ஜவான் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் டன்கி. 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி, டன்கி படத்தை இயக்கியுள்ளார். ஷாருக்கான் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்துள்ளார். மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள டன்கி நாளை திரைக்கு வருகிறது.
நெரு (Neru): திரிஷ்யம் திரைப்பட வெற்றிக் கூட்டணியான மோகன்லால், ஜீத்து ஜோசப் இணைந்து உருவாக்கியுள்ள புதிய திரைப்படம் நெரு. கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகியுள்ள நேரு படத்தில் மோகன்லால், ப்ரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை திரைக்கு வருகிறது.
சலார் (Salaar): கே.ஜி.எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள திரைப்படம், சலார். பாகுபலி மூலம் உலகளவில் பிரபலமான பிரபாஸ் நாயகனாகவும், அவருக்கு இணையாக முக்கிய கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்துள்ளார்.