சென்னை:நடிகர் கமல்ஹாசனின் 68-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்தியன்2, KH 234 ஆகிய படங்களின் அப்டேட்களை படக்குழுவினர் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று (நவ.06) கமல்ஹாசனின் 234-வது படத்தின் அறிமுக டீசரை வெளியிட்டு படத்தின் தலைப்பு ‘தக் லைஃப்’ என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் அதில் இடம் பெற்றுள்ள காட்சிகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள இந்தியன் 2 படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் தனது 233-வது படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியானது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது.
அதில், “என் பேரு ரங்கராயர் சக்திவேல் நாயக்கன், காயல்பட்டினக்காரன்” என தனக்கே உரிய ஸ்டைலில் கமல் வசனம் பேசியுள்ளார். இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த வீடியோவில் கமலின் தோற்றமும் அவரை எதிர்த்து சண்டை செய்பவர்களின் தோற்றமும் 2019-ஆம் ஆண்டு வெளியான ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர் (Rise of Skywalker) என்ற படத்தின் காட்சி போல உள்ளன என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.