சென்னை: 'எங்கேயும் எப்போதும்' என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் சரவணன், தற்போது 'நாடு' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாகவும், மஹிமா நம்பியார் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'எங்கேயும் எப்போதும்' படத்தின் இசையமைப்பாளரான சத்யா, இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சரவணன் பேசுகையில், "இப்போது சினிமாவில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் ரொம்பவே புத்திசாலித்தனமான, அறிவுக்கூர்மை வாய்ந்த கதாபாத்திரங்களாகவே காட்டப்படுகின்றன. நாங்கள் அதிலிருந்து விலகி எளிய மனிதர்கள் பற்றிய கதையாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் மலைவாழ் மக்கள் பிரச்னையை பேசி உள்ளோம். கொல்லிமலைப் பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு கொல்லிமலைக்குச் சென்றிருந்த சமயத்தில் நேரிலேயே நான் கண்ட ஒரு நிகழ்வு என் மனதைப் பாதித்தது. ரொம்ப நாட்களாக மனதில் இருந்த அந்த நிகழ்வை மையப்படுத்தி, இந்தப் படத்தின் கதையை உருவாக்கினேன்.
இந்தப் படத்தின் ஹீரோவான தர்ஷனை, அவர் ஆடிஷன் வருவதற்கு முன்புவரை நான் பார்த்ததே இல்லை. காரணம், நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை. ஆடிஷனுக்கு வருவதற்கு முன்பு கூட அவரது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவைத்தான் காட்டினார்கள். ஆனால், நேரில் அவரை பார்த்ததுமே இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியான நபர் என்று தோன்றிவிட்டது.
உடனே அவரிடம் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டேன். அதேபோல, இந்தப் படத்தின் ஒர்க் ஷாப்புக்கு வரும்போது பேண்ட் சர்ட் எல்லாம் போடாமல், லுங்கியை வாங்கி கட்டிக்கொண்டு வாருங்கள் எனக் கூறிவிட்டேன். அதிலிருந்து இந்தக் கதையுடன் அவர் தினசரி பயணிக்கத்தொடங்கி விட்டார். அதனால்தான் படப்பிடிப்பில் கூட அவர் ஸ்கிரிப்ட் பேப்பர் இல்லாமல் எல்லா வசனங்களையும் மனப்பாடமாக பேச முடிந்தது" என்று கூறினார்.
ஒளிப்பதிவாளர் சக்திவேல் பேசும்போது, "கொல்லிமலை பின்னணியில் இந்தப்படத்தின் கதை நிகழ்கிறது என்று சொன்னபோது, நிச்சயமாக இதை வித்தியாசமான முறையில் படமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்கேற்றபடி இதுவரை சினிமாவின் காலடி, படாத பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்" என்றார்.
படத்தின் நாயகன் தர்ஷன் பேசும்போது, "இயக்குநர் சரவணன் என்னிடம் கதை சொன்னபோது இந்தப் படத்தில் நான் இருக்கிறேனா என்று முதலில் என்னால் நம்ப முடியவில்லை. கொல்லிமலையில் பிறந்து வளர்ந்த இளைஞனாக இதில் நடித்துள்ளேன். கதாநாயகி மஹிமா நம்பியார் சீனியர் என்கிற ஈகோ பார்க்காமல் என்னிடம் சினிமா குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். வழக்கமாக, இதையெல்லாம் நான் செய்ய மாட்டேன் என்று சொன்ன மகிமா, படப்பிடிப்பில் என்னை பலமுறை உற்சாகப்படுத்திப் பாராட்டினார். இந்தப்படத்தில் என்னுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் இன்பாவுடன் நல்ல ஒரு நட்பு உருவானது. எங்களைப் பார்த்தவர்கள் திரையில் தோன்றுவதைவிட வெளியில் அவ்வளவு பிணைப்புடன் இருக்கிறீர்களே என்று ஆச்சரியப்பட்டார்கள்" என்று கூறினார்.
நாயகி மஹிமா நம்பியார் கூறுகையில், "இந்தப் படம் குறித்து இயக்குநர் என்னிடம் தொலைபேசியில் 20 நிமிடங்கள் கதை சொன்னார். அப்போதே இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். அதன்பிறகு நானே அவருக்கு போன் செய்து இந்தப்படத்தில் நான் நடிக்கிறேன் என்று கூறினேன். அவரும் பெரிய அளவில் ஆச்சரியம் காட்டாமல் அப்படியா என்று சொல்லி ஒப்புக்கொண்டார். அதைக் கேட்டதும் ஒருவேளை வேறு யாரிடமோ பேசுவதற்குப் பதிலாக தவறிப்போய் என்னிடம் கதைசொல்லிவிட்டாரோ என்று கூட குழம்பினேன். படப்பிடிப்புக்குச் சென்றபோது அவரிடம் என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ய என்ன காரணம் என நேரிலேயே கேட்டுவிட்டேன். அதற்கு அவர் சிம்பிளாக, இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சில பேரை அணுகலாம் என ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருந்தேன். அவர்களுக்கெல்லாம் போன்செய்து பேசியபோது அதில் எனக்கு மதிப்பளித்து திரும்பவும் பதிலளித்தவர் நீங்கள் ஒருவர் தான். அதனால்தான் உங்களையே கதாநாயகியாக தேர்வு செய்துவிட்டேன் என்றார்.
ஒளிப்பதிவாளர் சக்திக்கு மைக்ராஸ்கோப் கண்கள். இதுவரை நான் நடித்த பல படங்களில் எளிமையான கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்து இருந்தேன். அதனால், எனக்கு மேக்கப்பும் ரொம்பவே எளிமையாகவே இருக்கும். இந்தப் படத்தில் கொஞ்சம் ரிச்சாக டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதற்காக, அழகாக மேக்கப் செய்துகொண்டு வந்தால், அவரோ, இது கிராமத்தில் இருக்கும் டாக்டர் கதாபாத்திரம். இதற்கு இவ்வளவு மேக்கப் தேவையில்லை என்று கூறி அவற்றை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீக்க வைத்துவிடுவார். இதனால் ஒவ்வொரு முறை மேக்கப் போடும்போதும் சக்தி சாருக்கு பிடிக்குமா என்று யோசிக்கும் அளவுக்கு வந்துவிட்டேன். என்னைப் பொறுத்தவரை அவர் ஒளிப்பதிவில் நான் பயந்து பயந்து தான் வேலை பார்த்தேன்.