தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா - மனோஜ் பாரதிராஜா

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

cinema
cinema

By

Published : Mar 25, 2023, 3:02 PM IST

சென்னை:தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களுக்கு பெயர் போனவர் இயக்குநர் சுசீந்திரன். இவரது இயக்கத்தில் வெளிவந்த நான் மகான் அல்ல, பாண்டிய நாடு ஆகிய படங்கள் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியவை. இதுமட்டுமின்றி இவர் ஃபீல் குட் படங்களையும், விளையாட்டு தொடர்பான படங்களையும் தன் ரசிகர்களுக்கு அவ்வப்போது கொடுத்து வருகிறார். வெண்ணிலா கபடிக்குழு, அழகர் சாமியின் குதிரை போன்ற வரிசையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் வள்ளி மயில் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அதுமட்டுமின்றி இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் மூலம் சிறந்த கதைகளத்துடன் அமையும் பல்வேறு படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தன் தயாரிப்பில் உருவாகப்போகும் அடுத்து படத்தை பற்றிய தகவல்களை அறிவித்துள்ளார். அவர் தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் பல்வேறு புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் இமயமான பாரதிராஜா நடிக்க உள்ளார்.

நீண்ட நாட்களாக இயக்குநர் ஆக வேண்டும் என்ற முயற்சியில் இருந்து வந்த மனோஜ் பாரதிராஜா தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தனது தந்தை பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மகால் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவரின் பங்கு மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு சுசீந்திரன் தயாரிப்பில் தனது தந்தையை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.


பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையும் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஜி.வி. பிரகாஷின் இசையில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் முதல் பார்வையை வருகின்ற மார்ச் 31ஆம் தேதி அன்று 10 முன்னணி இயக்குநர்கள் வெளியிட உள்ளார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பம்பாய் படத்தில் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மனோஜ் பாரதிராஜா, தன் முதல் பட இயக்கத்திற்காக தன் குருவான மணிரத்னத்தை சந்தித்து ஆசி பெற்றார். தனது முதல் படத்தை தயாரிப்பதற்காக சுசீந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் இத்திரைப்படம் உருவாகும் என்றும் இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் ஜி.வி. பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார் மனோஜ் பாரதிராஜா.
இதையும் படிங்க:அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் "லேபிள்" வெப் சீரிஸ் - படப்பிடிப்பு தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details