மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாமன்னன் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் குவிந்து வரும் கமர்ஷியல் படங்களில், மக்களின் வலிகளையும் அவர்களது அழுகையையும் கதையாக செதுக்கி வருபவர் மாரி செல்வராஜ்.
அவரின் முதல் படமான பரியேறும் பெருமாள் அதற்கு மிகப்பெரிய ஒரு சான்றாக அமைந்தது. அதனை தொடர்ந்து வந்த கர்ணன் படமும் இதையே உரக்க பேசியது. முன்னணி நடிகரான தனுஷை வைத்து, மக்களின் வலியை திரையில் அழுத்தமாக பதிவு செய்தார் மாரி செல்வராஜ். அதனை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் ஒரு நல்ல படத்தில், தான் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். மேலும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முக்கியமான வேடத்தில் நடிகர் வடிவேலு நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வடிவேலுவின் தோற்றம் வித்தியாசமாக இருந்தது. இதன் மூலம் இப்படத்தில் வழக்கமான வடிவேலுவை பார்க்கப்போவது இல்லை என்பதை ரசிகர்கள் உணர்ந்து கொண்டனர்.
இதில் உதயநிதி ஸ்டாலின் அப்பாவாக நடிகர் வடிவேலு நடித்துள்ள நிலையில், இதுவும் ஒருவகையில் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் தூண்டியுள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல், ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், வடிவேலு பாடிய ராசா கண்ணு என்ற பாடல் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது என சொல்லும் அளவுக்கு அமைந்துள்ளது. இதன்மூலம் இப்படமும் மிகப் பெரிய அரசியலை பேசும் என்பது தெரிகிறது. வீண் மாயை வேரறுக்க மானுடத்தின் திசை திறக்க வருகிறான் மாமன்னன் என ட்ரெய்லரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படம் இந்த மாதம் 29ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ட்ரெய்லரின் தொடக்கத்தில் வடிவேலு குரலில் நான் பாடிக்கொண்டு இருப்பது ஒரே பாடலாக இருக்கலாம் ஆனால் அதனை தொடர்ந்து பாடுவேன் என்று வருகிறது. இது இயக்குனர் மாரி செல்வராஜ் தனக்காக சொல்வது போல் அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க:Leo Update: வெளியானது 'லியோ' அப்டேட்.. லோகோஷ் கனகராஜ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!