தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தேவர் மகன் படத்தில் ‘இசக்கி’ கதாபாத்திரமே மாமன்னன் - மாரி செல்வராஜ் - Vetrimaaran

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

தேவர் மகன் படத்தில் ‘இசக்கி’ கதாபாத்திரமே மாமன்னன் - மாரி செல்வராஜ்
தேவர் மகன் படத்தில் ‘இசக்கி’ கதாபாத்திரமே மாமன்னன் - மாரி செல்வராஜ்

By

Published : Jun 2, 2023, 10:00 AM IST

ராசா கண்ணு பாடலை லைவாக பாடிய வடிவேலு

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று (ஜூன் 1) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ், கமல்ஹாசன், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பலரும் பேசினர்.

வேண்டுகோள் விடுத்த தயாரிப்பாளர் கே.ராஜன்:உதயநிதி நடிப்பதை நிறுத்தக் கூடாது. வருடத்திற்கு ஒரு படமாவது நடியுங்கள்.

நன்றிக்கடன்பட்ட ஏ.ஆர்.முருகதாஸ்:மாரி செல்வராஜ் ஏற்கனவே பிரமாதமான படங்களை கொடுத்துள்ளார். இந்தப் படம் நிச்சயம் புரட்சிகரமான கருத்துக்களை சொல்லும் என்பதை போஸ்டரே சொல்கிறது. துப்பாக்கி படத்திற்கு வந்த பிரச்னைகளை உதயநிதி தலையிட்டு முடித்துக் கொடுத்தார். உதயநிதிக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

உதயநிதிக்கு நன்றி கூறிய பா.ரஞ்சித்: ஜெய்பீம். மாரி செல்வராஜுக்கு இப்படி ஒரு மேடை கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் படம் பண்ணும்போது பயமில்லை.‌ ஆனால், பரியேறும் பெருமாள் படம் செய்யும்போது பயமாக இருந்தது. மாரி செல்வராஜ் உருவாக்கிய படைப்பை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

இயற்கையாகவே அப்படம் மக்களிடம் சென்று சேர்ந்தது. சந்தோஷ் நாராயணன் இசையும் அதற்கு உதவியது. அம்பேத்கர் போட்டோ காட்டினால் மதுரை பற்றி எரியும் என்றார்கள். ஆனால், திரையரங்குகளில் மக்கள் கூடி கொண்டாடினர். பரியேறும் பெருமாள் பண்ணும்போது நிறைய பிரச்னை இருந்தது.

மக்கள் மட்டுமின்றி திரைக் கலைஞர்களும் உதவினர். அரசியல் பின்புலம் இருந்தாலும், மாரி செல்வராஜ் உடன் உதயநிதி இணைந்ததற்கு ரொம்ப நன்றி. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் வடிவேலுக்கு நன்றி. வடிவேலு கதாபாத்திரம் ஒர்க் அவுட் ஆகும் என்றார், மாரி செல்வராஜ். இதுவும் அரசியல் கதைதான். மக்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ரோலக்ஸ் பெற்ற கேஎஸ் ரவிக்குமார்:உதயநிதி எனக்கு 14 வருடங்களாக பழக்கம்.‌ ஆதவன் படத்தின் மூலம் பழக்கம். ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவர். சிரித்துக் கொண்டே இருப்பார். அப்படித்தான் அவரை பார்த்துள்ளேன். ஆனால் ஒரு 10 வருடத்தில் நிறைய மாறியுள்ளார். எவ்வளவு பழக்கம் இருந்தாலும், எனது படத்தை வெளியிட மறுத்து விட்டார்.

எத்தனை பழக்கம் இருந்தாலும் தனது கம்பெனிக்கு பெயர் கிடைக்காது என்றால், அதனை பண்ண மாட்டார். வாழ்த்துக்கள். சூர்யாவுக்கு முன்னர் எனக்குத்தான் கமல் ரோலக்ஸ் வாட்ச் கொடுத்தார். தசாவதாரம் படம் ‌பார்த்துவிட்டு எனக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார்.

உதயநிதியின் சினிமா பயணம் தொடர மிஷ்கின் விருப்பம்: இது ஒரு முக்கியமான மேடையாக பார்க்கிறேன். மாரி செல்வராஜ் இரண்டு படங்களிலேயே 20 படம் எடுத்த இயக்குநராக இருக்கிறார். இந்திய சினிமாவின் சிறந்த இயக்குநர் மாரி செல்வராஜ். ஏஆர்.ரஹ்மான் ஜீனியஸ்.

நமது வாழ்வை உபயோகமானதாக மாற்றுபவர். நீண்ட நாட்கள் வாழ வேண்டும். கமல் எப்படி ஜீனியஸ் என்று சொல்வார்களோ, அதேபோன்று வடிவேலுவும் ஜீனியஸ். நாகேஷுக்கு பிறகு உடல்மொழி மூலம் சிரிக்க வைப்பவர் வடிவேலு. உதயநிதி சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும்.

இனிமேல் மாமன்னன் போன்று படம் பண்ணுங்க. சைக்கோ மாதிரி படம்‌ பண்ணாதீங்க. ஒரு 50 நாள் கொடுத்தால் சைக்கோ 2 எடுத்து விடுவேன். வெகு சீக்கிரத்தில் அவர் நம்மை பத்திரமாக பார்த்துக் கொள்ளப் போகிறார். நான் சொல்வது புரிந்தது என்று நினைக்கிறேன். இப்படம் மிகப் பெரிய வெற்றி பெறும்.

ஹீரோ யார் என கூறிய கிருத்திகா உதயநிதி: என்னை மேடை ஏற்ற வேண்டாம் என்றேன். படம் பார்த்துவிட்டேன். வடிவேலுதான் ஹீரோ. இப்படம் உதயநிதி கரியர் பெஸ்ட்டாக இருக்கும்.

வடிவேலு உடன் பணியாற்ற விரும்பும் பிரதீப் ரங்கநாதன்:வாழ்க்கையில் எல்லா நிலைக்கும் வடிவேலு வசனம் உள்ளது. அது ஒரு தனி மொழி. அவருடன் பணியாற்ற விரும்பினேன். எனக்கு மாரி செல்வராஜ் இயக்கிய இரண்டு படங்களுமே பிடிக்கும்.

உதயநிதியை வேண்டாம் என்ற விஜய் ஆண்டனி:உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி வழி அனுப்புகிறேன். அதற்கு நீங்கள் தகுதியானவர். நீங்கள் இங்கு வர வேண்டாம் அங்கேயே இருங்கள். இப்படமும் வெற்றி பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இதற்காக ஆசைப்பட்ட வெற்றிமாறன்: சமூக நீதி பேசும் படங்களை எடுத்து வணிக ரீதியான வெற்றியை கொடுக்க முடியும் என்றால், அது தமிழ்நாட்டில் மட்டும்தான் முடியும். சமூகத்தில் அதற்கு ஒரு முக்கிய இடம் கொடுப்பதும் தமிழ் சினிமாவில்தான். உதயநிதி மாமன்னன் இல்லை. வடிவேலுதான் மாமன்னன்.

உண்மையான நடிகர் வடிவேலு. அவரை இதுபோன்ற சீரியஸ் படத்தில் பார்க்க ஆசைப்பட்டேன். மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதிக்கு நன்றி. தமிழ் மொழிக்கே வடிவேலு பங்களிப்பு செய்துள்ளார். ஒரு நடிகராக அவரது சாதனை நடிப்பைத் தாண்டியது. சமூக நீதியை சினிமாவில் பேசியதால்தான் சமூக நீதி பேச முடிகிறது. சமூக நீதிக்கு எதிரானவர்களிடம் போராட முடிகிறது.

கீர்த்தியை பாராட்டிய எஸ்ஜே சூர்யா:ஒரு தமிழ் இயக்குநருக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. மாரி செல்வராஜ் ஒரு சிறந்த இயக்குநர். புதுமையான உணர்வுள்ள படமாக கர்ணன் படம் இருந்தது. உதயநிதி நினைத்தால் எப்படி பட்ட படம் வேண்டுமானாலும் நடித்து இருக்கலாம். ஆனால், இது போன்ற படங்களில் நடித்துள்ளது நன்று. கீர்த்தியின் நடிப்புக்கு தீனி போடும் படமாக இப்படம் இருக்கும்.

அந்த சத்தத்தை சிலாகித்த சிவகார்த்திகேயன்:எனக்கு மிகவும் பிடித்த நபர் .ஆர்.ரஹ்மான். இப்படத்தில் சிக்கு புக்கு ரயில் பாடலில் அவருடைய நடனம் பிடித்திருந்தது. மாமன்னன் போஸ்டர் வந்ததில் இருந்து இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வடிவேலுவை வேறு மாதிரி காட்டியுள்ளார். இப்படம் கமலுக்கு இன்னும் அதிக சந்தோஷத்தை கொடுக்கப் போகும்.

விளையாட்டாக படம் நடிக்க தொடங்கி, தற்போது விளையாட்டுத் துறைக்கு அமைச்சர் ஆகியுள்ளார். உங்களது துறை நிறைய வீரர்களை உருவாக்கும் துறை. இது உதயநிதிக்கு மைல் கல் படமாக இருக்கும். இயக்குனர் வெற்றிமாறனுக்கு இங்கு மக்கள் கொடுத்த கைதட்டல் எங்களுக்கு உத்வேகமாக இருக்கிறது. மாமன்னனுக்கு இந்த மாவீரனின் வாழ்த்துகள்.

கம்யூனிஸ்ட் கீர்த்தி சுரேஷ்:இப்படி ஒரு தமிழ் மேடையில் தமிழில் பேசி நீண்ட நாட்கள் ஆகிறது. இப்படம் கரோனா சமயத்தில் ஜூம் காலில்தான் தொடங்கியது. கற்றுக் கொண்டதை மறந்து விட்டு, வேறு ஒன்றை கற்றுக் கொள்வதை உங்களிடம் (மாரி செல்வராஜ்) கற்றுக் கொண்டேன்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் உங்கள் படங்களில் இருக்கும். வைகைப் புயலை இப்படத்திற்கு பிறகு மாமன்னன் என்று அழைப்பார்கள். நீங்கள் நடிகர் என்பதைத் தாண்டி ஒரு உணர்வு. வடிவேலுவை இதுபோன்று பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. மதிப்புக்குரிய அமைச்சர் உதயநிதி.

நான் காலேஜ் நடிக்கும்போது உங்கள் முதல் படத்தை பார்த்து ரசித்துள்ளோம். ஸ்டாலின் மகன் எப்படி அழகா இருக்காருனு நண்பர் உடன் பேசியுள்ளோம். பகத் பாசிலுக்கு தமிழில் மீண்டும் படங்கள் வர வாய்ப்பு உள்ளது. படத்தில் நான் கம்யூனிஸ்ட் ஆக வருகிறேன் என்றார்.

நான் அவன் இல்லை என்ற வடிவேலு: மாமன்னன் படமல்ல, நிஜம். தரையில் பார்த்த வலியையும், சோகத்தையும் திரையில் நான் நடிக்க காரணமாக இருந்தவர் கமல். அவரிடம் எடுத்த பயிற்சிதான். இந்த பாட்டை முதலில் என்னை பாடச் சொல்லி அனுப்பி இருந்தனர். பின்னர் கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல் எனக்கு சொல்லிக் கொடுத்து பாட வைத்தார்.

மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் இசைப்புயலும் வைகைப்புயலும்

நான் வாழ்வில் நிறைய கஷ்டங்களை சந்தித்து வந்தவன். இப்படத்தின் கதை இதுவரை வெளியே வரவில்லை. மாரி செல்வராஜின் வலியை சொல்லியுள்ளார். ஆனால் அனைவரது வலியும் இதில் தொடர்புபடுத்தி பார்க்க முடியும். படப்பிடிப்பு சமயத்தில் நிறைய கலாட்டா செய்துள்ளோம். அதையும் கடந்து படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படம் மிகப் பெரிய படமாக மாறியுள்ளது. ஆனால், உண்மையில் மாரி செல்வராஜ்தான் மாமன்னன். நான் குறுநில மன்னன்தான். இது போன்ற கதாபாத்திரம் இனி எனக்கு கிடைப்பது கடினம். கமல் தயாரிப்பில் நீங்கள் நடிக்க இருந்த படத்தை நீங்கள்தான் நடிக்க வேண்டும். உங்களால்தான் பண்ண முடியும் என்று கமல் சொல்லியுள்ளார். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

தேதி வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்:அனைவருக்கும் நன்றி. இது எனது கடைசி படம் என்று நான் கூட ஒருதடவைதான் சொன்னேன். ஆனால் அப்படி சொல்லித்தான் மாரி செல்வராஜ், கீர்த்தி, வடிவேலு, ஏஆர் ரகுமான் தேதிகள் வாங்கினேன். மாரி செல்வராஜ் கதை சொன்னபோது இந்த கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.

வடிவேலு நடித்தால் இந்த கதை பண்ணலாம். இல்லை என்றால் வேண்டாம் என்று முடிவெடுத்தோம். இப்படத்தின் மாமன்னன் வடிவேலுதான். 80 நாட்கள் என்று சொல்லி எங்களை அழைத்து சென்றார்.‌ ஆனால் 110 நாட்கள் ஆனது. அப்புறம் ஒருமாதம் கழித்து 3 நாட்கள் படப்பிடிப்பு வேண்டும் என்றார். நேற்று போன் செய்து இன்னும் ஒரு நாள் கேட்டார்.

இப்போதைக்கு இதுதான் எனது கடைசி படம். மூன்று வருடம் கழித்து படம் நடிப்பதாக இருந்தால், அது மாரி செல்வராஜ் படம்தான். அவர் இயக்குநர் அல்ல, மேஜிக் மேன். வடிவேலு நடித்த காட்சிகளைப் பார்த்து அவரை போய் கட்டிப்பிடித்து விட்டேன். நிறைய கஷ்டப்பட்டார், மாரி செல்வராஜ். .ஆர்.ரஹ்மான் இசையில் படம் நடிப்பது எனது கனவு. இப்படத்தை ஜூன் 29ஆம் தேதி வெளியிட முயற்சி செய்து வருகிறோம். மாரி செல்வராஜ் அரசியலை பேசும் படமாக இது இருக்கும்.

தேவர் மகன் இசக்கியாக மாரி செல்வராஜ்: இரண்டு படம் இயக்கி உள்ளேன். அப்போது சீரியஸாக இருப்பேன். ஆனால் இப்போது சீரியஸாக இல்லை. அதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின். இந்த நிகழ்ச்சி என் வாழ்வில் முக்கியமான விழாவாக மாறியுள்ளது. மாமன்னன் படமாகுமா என்ற சந்தேகம் இருந்தது.

ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் படம் பண்ணுற, பாத்து இரு என்றார்கள். எனது நூலகத்தில் இருந்து உதயநிதிக்கு பிடிக்காத கதையை அவருக்கு சொன்னேன். ஆனால் கேட்டதும் அவர் நன்றாக இருக்கிறது என்று ஓகே சொல்லிவிட்டார். அதன்பிறகு என்னை நம்பிய பகத் பாசில், கீர்த்தி, வடிவேலு, உதயநிதி ஆகியோருக்கு நன்றி.

என்னை பண்பட்டவனாக மாற்றியதில் இந்த நான்கு பேரின் பங்கு உள்ளது. ரகுமான் எனக்கு இசையைத் தாண்டி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். நான் எனது வாழ்வில் பட்ட அடிகளால் ஒரு தயக்கம் இருந்தது. பாடல்களைத் தாண்டி அவருடைன் பயணித்த நாட்களே எனக்கு போதுமானது.

என் ஊரில் என்னுடன் மாமன்னன் படம் பார்த்தார். அப்போதே இப்படம் பெற்றுவிட்டது. மாமன்னன் வடிவேலு கதாபாத்திரம் என் அப்பா. வடிவேலுவுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது. கமலுடன் அமர்ந்து மாமன்னன் பார்த்தேன். மாமன்னன் உருவாக தேவர் மகன் படமும் ஒரு காரணம். அப்படம் எனக்கு மிகப் பெரிய மனப்பிறழ்வு உண்டு பண்ணிய படம்.

தேவர்‌ மகனில் எனது அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என்பதே மாமன்னன். தேவர் மகன் இசக்கி மாமன்னாக மாறினால் எப்படி இருக்கும் என்பதே மாமன்னன். அந்த இசக்கிதான் மாமன்னன். மாரி செல்வராஜ் அரசியலை ஒப்புக் கொண்ட உதயநிதிக்கு நன்றி. நான் வன்முறையை தேர்வு செய்யும் ஆள் கிடையாது. விஷத்தின் ஒரு துளி விஷயம்தான் மாமன்னன். உங்களுக்குள் ஒரு கேள்வியை உருவாக்கும்.

நன்றி மட்டும் கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்:இப்படத்திற்காக இரவு பகலாக பணியாற்றிய எனது குழுவினருக்கு நன்றி

மாமன்னன் அரசியல் பேசிய கமல்ஹாசன்:பல மேடைகளில் படத்தை பார்க்காமல் படம் பற்றி பேசுவார்கள். வாழ்த்துவார்கள். நான் படம் பார்த்துவிட்டேன். இது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பது எனது ஆசை. இப்படத்தின் பேசும் குரல் கேட்கப்பட வேண்டும். நம் அரசியல் அப்படித்தான் இருக்க வேண்டும்.

இந்தியா எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தலைமுறைகள் நாம். இதுவும் என் படம்தான். என்னைப் பொறுத்தவரை, இது எனது அரசியலும்தான். வடிவேலு நடிப்பிலும் மாமன்னனாக இருக்கிறார். தேவர் மகன் படத்தில் என்னுடைய நடிப்பையும் வடிவேலு தாங்கிப் பிடித்தார். அழகோடு அறிவும் சேர்ந்ததுதான் பேரரழகு. அது கீர்த்திக்கு இருக்கிறது.

நிறைய எமோஷனல் காட்சிகள் உள்ளது. எதிர்தரப்பினருக்கும் சமமான இடம் கொடுப்பது மாரி செல்வராஜ் உங்களுக்கு தெரிகிறது. கோபத்தில் அது வராது. ஆனால் நீங்கள் அப்படியில்லை சமநிலை தவறாமல் இருக்கிறார். ரகுமானின் இசைக்கு மூன்று தலைமுறைகள் மயங்கிக் கொண்டு இருக்கிறது.

கற்றுக்கொள்ள வயது முக்கியம் இல்லை. நான் இவ்விழாவை தலைமை தாங்கவில்லை. என் தோளில் தாங்குகிறேன். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் தரத்தை நமக்குச் சொல்லும். சமூக நீதி தொடர்பான உரையாடல் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல தலைமுறையை நாம் விட்டுச் செல்வோம்.

இதையும் படிங்க:தாத்தா வயதில் தந்தையான நடிகர்... 83 வயதில் 4வது குழந்தை!

ABOUT THE AUTHOR

...view details