சென்னை:இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம், மாமன்னன். இப்படத்தில் வடிவேலு சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமூக நீதி சார்ந்த படம் எடுப்பதில் கைதேர்ந்த மாரி செல்வராஜ் இந்த படத்திலும் பிற்படுத்தப்பட்டோர் ஒடுக்குமுறை பற்றி பேசியுள்ளார்.
இத்திரைப்படம் நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் வெளியானது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. வழக்கமான மாரி செல்வராஜ் படமாக இருந்தாலும், இந்த முறை பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஆதிக்க சாதியினரால் எப்படி நடத்தப்படுகிறார் என்பதை பேசியுள்ளார். இப்படம் முன்னாள் சபாநாயகர் தனபால் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்று ஒரு கருத்து நிலவி வருகிறது.
தனபால் இரண்டு முறை சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர். இவரது கதையில்தான் வடிவேலு மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். ஒரே கட்சியில் இருக்கும் பட்டியல் இன எம்எல்ஏவை எப்படி ஆதிக்க சாதியினர் நடத்துகின்றனர், அவருக்கான மரியாதை என்ன என்பதை காட்டியுள்ளார். இப்படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரும் சிறப்பாக நடித்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க:தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.. உற்சாகத்தில் ரசிகர்கள்..