சென்னை: மாமன்னன் திரைப்படத்தின் வெற்றிவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், லால், விஜயகுமார், யுகபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது விழாவில் பேசிய கீர்த்தி சுரேஷ், 'இப்படி ஒரு வெற்றி மேடையில் நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இதுபோன்ற பெரிய படங்களில் பெண் நடிகைகளுக்கு நல்ல வேடம் கிடைப்பது கடினம் என்றும் கூறினர். இதற்கு வாய்ப்பளித்த இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி' என்றார்.
ரூ.52 கோடி வசூல்:தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், 'படத்தின் வெளியீட்டுக்கு முன்பே இந்த படத்துக்கு விளம்பரம் கொடுத்த உங்களுக்கு நன்றி என்று பேசத் தொடங்கினார். படம் இரண்டாவது வாரமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பதாகவும், மாமன்னன் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.52 கோடி வசூலித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவே தனது திரை வாழ்வில் மிகப்பெரிய வசூல் என்றும் ஒரு நல்ல படத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து விட்டீர்கள் என்றும் மகிழ்ச்சியடைந்தார். தன்னுடைய முதல் படமும் மற்றும் கடைசி படமும் வெற்றிப்படமாக அமைந்தது எனக்கு நல்லதொரு விழாவாக தன்னை வழியனுப்பி வைத்திருப்பதாகவும் கூறினார்.
அபாரமான வடிவேலுவின் நடிப்பு:இதுதான் என்னுடைய கடைசி சினிமா நிகழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், கண்டிப்பாக படத்தின் 50 வது நாள் விழா மேடையில் சந்திப்போம் என்றார். மேலும், இந்த படத்தின் போஸ்டர் வெளியிட்ட அன்றே படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே ஓடிடி தளத்தில் படத்தை விற்றுவிட்டோம் என்றார். இந்த படத்தில் உபயோகித்த அனைத்து பொருட்களும் உண்மையானவை எனக்கூறிய உதயநிதி ஸ்டாலின், வடிவேலுவின் நடிப்பு மிகவும் அருமையாக இருந்ததாக அவரை வெகுவாகப் பாராட்டினார். மலையில் நின்று அவர் அழும்போது யாரும் அழாமல் இருக்க முடியாது என்றும் அவர் இப்படத்தை பண்ணவில்லை என்றால் படமே பண்ண வேண்டாம் என்று சொல்லியதாக அவர் பெருமை கூறினார்.