சென்னை:உலகமெங்கும் பெரும்பாலான படங்கள் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்படுவது நீண்ட நாட்களாகப் பின்பற்றி வரக்கூடியவை.அந்த வகையில், இந்த ஆண்டு நிறைவடைய ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், வெளியாகாமல் இருக்கும் படங்கள் அனைத்தும், அடுத்தடுத்த வாரங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இன்று (நவ.24) மொத்தம் ஐந்து படங்கள் வெளியாகி உள்ளன.
80ஸ் பில்டப்:குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற படங்களை இயக்கிய கல்யாண், தற்போது சந்தானத்தை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் '80ஸ் பில்டப்'. இப்படத்தில் கதாநாயகியாக ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 80-ஸ் காலகட்டத்து காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம், சந்தானத்தின் வழக்கமான காமெடி கலாட்டாவாக இருக்கும் என்று ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
குய்கோ:செய்தித் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவர், அருள்செழியன். இவர் தற்போது முதல் முறையாக இயக்கியுள்ள படம் 'குய்கோ'. குடியிருந்த கோயில் என்ற வார்த்தையின் சுருக்கமே குய்கோ. இப்படத்தில் விதார்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இறந்தவர்களை வைக்கும் குளிர்சாதனப் பெட்டி பற்றிய கதையாக இது உருவாகியுள்ளது. இப்படமும் இன்று வெளியாகியுள்ளது.