சென்னை:ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'ஜப்பான்' (Japan Movie). இப்படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடித்துள்ளார். ஜீவி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (அக். 28) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கார்த்தி, இயக்குனர் ராஜு முருகன், லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், சுசீந்திரன், முத்தையா, சிறுத்தை சிவா, சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், "நான் சென்னைக்கு வந்த பிறகு தான் கார்த்தி பிறந்தார். கார்த்தி, சூர்யா இருவரும் சினிமாவிற்கு வருவார்கள் என நினைக்கவில்லை.
கார்த்தி, சூர்யாவின் சிறு வயதில் அவர்களுக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கி கொடுக்க அழைத்துச் சென்று அவர்களுக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கி கொடுப்பேன். அப்போதுதான் அண்ணன் சிவக்குமாருக்கு தெரியாமல் தம் அடிப்பேன். பிறகு சிகரெட் வாசம் அடிக்காமல் இருக்க நானும் ஆரஞ்சு மிட்டாய் வாயில் போட்டு செல்வேன்.
நான் பெருமையாக நினைப்பது தந்தை 'பெரியார்' (Periyar Ramaswamy) கதாபாத்திரத்தில் நடித்தது தான். இந்த கதாபாத்திரம் சிவாஜி ஐயா நடிக்க ஆசைப்பட்டு நடிக்க முடியாமல் போனது. அதேபோல, எம்.ஜி.ஆர் நடிக்க ஆசைப்பட்டு நடிக்க முடியாமல் போனது, வந்தியத்தேவன் கதாபாத்திரம்.