பெங்களூரு:தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கர்நாடகாவில் போராட்டம் நீடித்து வருவதால், நாளை மறுநாள் முழு கடை அடைப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழ் நடிகர் சித்தார்த் தனது ‘சித்தா’ (சிக்கு என கன்னடத்திலும் வெளியாகிறது) படத்தின் ப்ரோமோஷனுக்காக இன்று (செப்.28) பெங்களூரு சென்றார். ஆனால், இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டபோது, கன்னட ஆதரவு அமைப்புகளின் தொண்டர்கள் அந்த இடத்திற்குச் சென்று இடையூறு செய்துள்ளனர்.
தமிழில் ‘சித்தா’ என்று அழைக்கப்படும் இந்தப் படம் கன்னடத்தில் ‘சிக்கு’ என்ற பெயரில் வெளியாகிறது. மல்லேஸ்வரத்தில் உள்ள திரையரங்கில் படத்தின் ரிலீஸ் குறித்த செய்தியாளர் சந்திப்பை சித்தார்த் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, கன்னட ஆதரவு அமைப்பு தலைவர்கள் நிங்கராஜு கவுடா, கரவே ஸ்வாபிமானி சேனா தலைவர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், காவிரி நதிநீர் பிரச்னைக்காக போராடி வரும் நிலையில், தமிழ் சினிமாவுக்கு செய்தியாளர் சந்திப்பு தேவையா என்று அந்த அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.