சென்னை:நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகிய திரைப்படம், 'சந்திரமுகி 2'(Chandramukhi 2). காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் பி.வாசு இயக்கியுள்ளார். இந்த நிலையில், இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், சந்திரமுகி 2 படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, நடிகை கங்கனா ரனாவத் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நன்றி என பதிலளித்துள்ளார்.
அந்த கடிதத்தில், 'மிகப்பெரிய வெற்றிப் படமான தன்னுடைய சந்திரமுகியை புதிதாக, வேறு ஒரு கோணத்தில், ஒரு பிரமாண்ட பொழுதுபோக்குப் படமாக, சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் நண்பர் வாசு, அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்' என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸும், தனது சமூக வலைத்தளத்தில் ரஜினிகாந்தின் கடிதத்தை மறுபகிர்வு செய்து நன்றி தெரிவித்தார். மெகா ஸ்டாருடன் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ள ராகவா, "இது எனது நாளை, என் சகோதரர், என் குரு, என் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரிடமிருந்து ஒரு ஆச்சரியமான காதல் குறிப்பை உருவாக்கியது. ரஜினிகாந்த்திடம் இருந்து படத்திற்கு இதைவிட என்ன பாராட்டு வேண்டும்? உங்கள் ஊக்கம்தான் எங்களுக்கு உலகம். நன்றி தலைவா! குருவே சரணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் ரஜினிகாந்த், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை கூறுவதாக இப்படத்தின் கதையம்சம் உள்ளது.
இதையும் படிங்க:சந்திரமுகி 2 படத்தைப் பார்த்த ரஜினிகாந்த்.. தொலைபேசி வாயிலாக படக்குழுவினருக்கு பாராட்டு!