நம் தமிழ்நாட்டின் பெருமைமிகு வரலாற்றுத் தலைவர், முன்னாள் முதலமைச்சர், மக்கள் மனங்களில் என்றென்றும் குடியிருக்கும் பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கையினை வெள்ளித்திரையில் கொண்டு வந்த திரைப்படம் தான் 'பெருந்தலைவர் காமராஜ்'.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான “ பெருந்தலைவர் காமராஜ் 2 " தயாராகி வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் & புத்தக வெளியீட்டு விழா முன்னணி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் நேற்று (ஜூலை 15) இனிதே நடைபெற்றது.
ரமணா கம்யூனிகேஷன் சார்பில் இப்படத்தினை இயக்குநர் AJ பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். இவ்விழாவினில் இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது, “காமராஜ் மறையவில்லை. உங்கள் கைதட்டல்களில் இன்னும் இருக்கிறார்.
நான் ஆரம்ப காலத்தில் பள்ளிகள் குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்க ஆசைப்பட்டேன். அப்போது ஒரு பொட்டல்காட்டு பள்ளிக்கூடம் பற்றி, அதைக் கட்ட சொன்னது யார் என்பது பற்றி எடுக்க ஆசைப்பட்டேன். எத்தனை முயன்றும் முடியவில்லை.
அந்த பொட்டல்காட்டில் பள்ளிக்கூடம் கட்டியவர் கர்மவீரர் காமராஜ் அவர்கள். ஒரு படம் எடுத்தால் அதன் ஊழல் வெளிவந்து விடும் என எடுக்க விடவில்லை. ஆனால், இந்த நாட்டில் ஒரு ஆவணப்படமே முடியாதபோது உண்மையாய் வாழ்ந்து இத்தனை சாதனை படைக்க காமராஜரால் எப்படி முடிந்திருக்கும்.
எப்படி இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தார் என ஆச்சர்யமாக இருக்கிறது. தன் வாழ்நாள் முழுதும் உண்மையை கடைபிடித்தவர். என் படத்தில் ஒரு வசனம் வரும். 'நான் காமராஜர் போல் கை சுத்தமானவன்டா' என ஒரு பாத்திரம் சொல்லும். திரையில் மக்கள் அந்த வசனத்தை கொண்டாடினார்கள். மக்கள் அவர் மீது அத்தனை அன்பு வைத்துள்ளார்கள்.
உங்களுக்கு இந்தப் படம் நன்றாக எடுக்க தொழில்நுட்ப ரீதியில் என்ன உதவிகள் வேண்டுமானாலும் கேளுங்கள். கேமரா முதல் எல்லாம் நான் செய்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது காமராஜர் போல் இந்தப்படத்தை எடுக்க வேண்டியது தான். நம் முன்னோர்கள் எப்படி நம் ஆன்மாவைக் காக்கிறார்கள் என நாம் நம்புகிறோமோ, அதே போல் அவர் உங்களைக் காப்பார். இந்த விழாவிற்கு என்னை அழைத்தது எனக்குப் பெருமை.
என் படங்களில் காமராஜரைப் பற்றி பேசியிருக்கிறேன். அவரின் பிறந்த நாளில் அவரின் நினைவைப் போற்றும் விழாவில் பங்கு கொள்வது எனக்கு வாழ்நாள் பாக்கியம். அனைவருக்கும் என் நன்றிகள்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: வரவேற்பை பெற்ற ஜீவாவின் 'மல்லு கேர்ள்' பாடல்!