ஹைதராபாத்:நாளை நடிகர் கமல்ஹாசனின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள 234வது படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மணிரத்னம் கமல்ஹாசன் இணையும் படத்திற்கு thug life எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் மூவீஸ், மகேந்திரன், சிவா ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு பணியை மேற்கொள்கிறார். ஸ்ரீரிகர் பிரசாத் படத்தொகுப்பும், அன்பறிவ் சண்டைக் காட்சிகளையும் கையாள்கின்றனர்.
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி நாயகன் படத்திற்குப் பிறகு 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தில் இணைகின்றனர். இந்த கூட்டணி நாயகன் என்ற கிளாசிக் படத்திற்குப் பிறகு தற்போது பல நட்சத்திர நடிகர்களுடன் இணைவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் கேங்ஸ்டர் சம்பந்தப்பட்ட கதை எனவும் கூறப்படுகிறது.