சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் கமல்ஹாசன், இன்று தனது 69வது பிறந்தநாளினைக் கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு திரையுலகினர் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கமலஹாசன் அறிமுகம்: குழந்தையாக தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மா படத்தில் தனது மழலை மாறாத குரலில் “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” என்ற பாடலைப் பாடி தமிழ் மக்களுக்கு அறிமுகமானார்.
இந்த பாடலினால் 1960ஆம் ஆண்டு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை பெற்றார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த நாயகன், அதன்பின் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின் திரையுலகில் கொண்ட முழு ஈடுபாடு காரணமாக, கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகில் முன்னேறி வந்தார்.
அங்கீகாரம் அவதரித்த கதை:கமல்ஹாசனின் திறமைக்கு அங்கீகாரம் கொடுத்த இயக்குநர், பாலச்சந்தர். இவர் இயக்கிய “அரங்கேற்றம்” படத்தில் கமல் நாயகனாக அறிமுகமானார். அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் ஆகிய படங்கள் கமலுக்கு வெற்றியைத் தேடி தந்ததால், தொடர்ந்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார்.
நடிகன் நாயகனாக உருவெடுத்த காலம்: தனது ஆரம்ப காலத்தில் இளமை நாயகனாக மட்டுமே நடித்து வந்த கமல்ஹாசன், பின் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து, தன்னை நடிகனாக செதுக்கிக் கொண்டார். அதற்கு இயக்குநர்களாகிய பாலச்சந்தர், பாரதிராஜா, விஸ்வநாத், சிங்கீதம் சீனிவாசராவ், பாலு மகேந்திரா, சந்தானபாரதி ஆகியோரும் காரணமாக அமைந்தனர். 80களில் தொடங்கிய இந்த திரைப்பயணம், தற்போது வரை முடியவில்லை.
வறுமையின் நிறம் சிகப்பு, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சலங்கை ஒலி, குணா, மகாநதி, குருதிப்புனல், ஹேராம், விருமாண்டி, தேவர் மகன் படங்கள் கமல்ஹாசனுக்கு காலம் கடந்தும் பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. கமல்ஹாசன் திரைப்பயணத்தில் உச்சம் தொட்ட படம் என்றால், தேவர் மகன் தான்.