உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'கலகத்தலைவன்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், இயக்குநர் மகிழ் திருமேனி, ஶ்ரீகாந்த் தேவா, மாரி செல்வராஜ், மிஷ்கின், அருண் விஜய், அருண் ராஜா காமராஜ், சுந்தர் சி, விஷ்ணு விஷால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா,“ரொம்ப சந்தோஷமாக உள்ளது. எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு உதயநிதிக்கு நன்றி. உதயநிதி நடிப்பை பார்த்து மெய் சிலிர்க்கிறது. இயக்குநர் மகிழ் திருமேனி இடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்றார்.
இயக்குநர் ராஜேஷ் பேசுகையில், ”10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை நான் தான் இயக்கினேன். முன்பை விட தற்போது இன்னும் இளமையாக உள்ளார். அவருடைய மகன் தான் இப்படி உள்ளாரா என்று தோன்றியது. காதல் படங்கள் செய்து வந்த அவர் தற்போது வித்தியாசமான படங்கள் செய்து வருகிறார். அவரை அறிமுகம் செய்த இயக்குநர் என்று மிகவும் பெருமையாக உள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.
இயக்குநர் நடிகர் சுந்தர் சி பேசுகையில், “நான் படம் பண்ண வேண்டும் என ஆசைப்பட்டு பண்ணாமல் உள்ள இரண்டு பேர் ஒன்று விஜய் மற்றொன்று உதயநிதி. உதயநிதி என்னுடன் படம் பண்ண வேண்டும் என ஐடியா கொடுத்தார். ஆனால் பண்ண முடியவில்லை. அவருக்காக பண்ணிய கதையை தான் நான் எடுத்தேன் ’தீயா வேலை செய்யணும் குமாரு’ படம் தான் அது.
ஒரு ஹீரோ அவருக்காக பண்ண கதையை விட்டு கொடுக்க மனம் வேண்டும். எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு படம் பண்ண உதவியாக ரெட் ஜெயன்ட் உள்ளது. என்னை போன்ற நிறைய தயாரிப்பாளர்களுக்கு உதவியாக உள்ளது. அதற்காவும் நன்றி” என்றார்.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், "மேடையில் பேச வந்ததும் சிறிது நேரம் ரசிகர்கள் கத்திக்கொண்டு இருந்ததால், ”இப்போதுதான் ஆரம்பித்துள்ளேன் குளோஸ் பண்ணிடாதீங்க” என்றார்.
பின்னர் தொடர்ந்து பேசிய அவர், “உதயநிதிக்கு மிக்க நன்றி. ’லவ் டுடே’ படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்க காரணம் நீங்கள் தான். படத்தை பார்த்து எனக்கு நீங்கள் வாழ்த்து சொன்னது பெரிய விஷயம். அதை என் நண்பர்களிடம் காட்டினேன்” என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “’மாமனிதன்’ அப்டேட் வேண்டும் என ரசிகர்கள் கேட்டதால் எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. நான் ரெட் ஜெயன்ட் மேடைக்கு தயாராகி வருகிறேன். எனக்கு இந்த மேடை புதியது. மகிழ் திருமேனி படத்தில் ஒரு அமைதி இருக்கும். தொந்தரவு செய்யாதா அமைதி இருக்கும். எனக்கு அது ரொம்ப பிடிக்கும். படம் நமக்கு கனெக்ட் ஆகவில்லை என்றாலும் அந்த அமைதி மிகவும் பிடிக்கும். அவர் காட்டும் காதல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
உதய் லவ் படம் பண்ணும் போது குழந்தையாக மாறி விடுவார். மாமன்னன் படத்தில் நான் காதல் வைக்கவில்லை. அவர் குழந்தையாக மாறக் கூடாது என காதல் வைக்கவில்லை. கடைசி படம் பண்ணலாம் என என்னை கூப்பிட்டார். ஆனால் தொடர்ந்து படம் பண்ணி வருகிறார்” என கிண்டலாக சொன்னார். பின்னர் “ஆசையாக படம் பண்ணலாம் என கூப்பிட்டார். ரொம்ப நெருக்கமாக ஒரு உறவை ஏற்படுத்தி விட்டு தான் படம் பண்ணவே வந்தார்.
‘பரியேறும் பெருமாள்’ போன்ற படங்கள் பண்ணும் போது ஒரு அழுத்தத்துடன் தான் செய்தேன். தயாரிப்பாளர் அழுத்தம் இல்லை, எனக்கு நானே கொடுத்து கொண்ட அழுத்தம் அது. ஆனால் ரெட் ஜெயன்ட் உடன் பண்ணும் போது அதெல்லாம் இல்லை. ‘மாமன்னன்’ மற்றும் ’கலகத் தலைவன்’ மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்
இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “உதய் ரொம்ப நாள் மிரட்டி கொண்டு இருக்கிறார், நான் போய் விடுவேன் என்று நீங்கள் தான் அவரை போக விடாமல் செய்ய வேண்டும். இந்தியா தோற்றது சோகமாக இருந்தது. ஆனால் ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.