சென்னை:சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது.
படம் வெளியாவதற்கு முன்பு எதிர்பார்ப்பு சற்று குறைவாக இருந்தாலும் காவாலா, ஹுகும் ஆகிய பாடல்கள் வெளியான பின்பு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் ரஜினிகாந்த் இசை வெளியீட்டு விழாவில் கூறிய குட்டி கதை சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், காவாலா பாடல் இளைஞர்களை கவர்ந்தது. தமன்னாவை முதன்மையாகக் கொண்டு முதல் சிங்கிள் பாடல் வெளியாவதாக முதலில் ரஜினி ரசிகர்கள் ஆட்சேபனைத் தெரிவித்தனர். ஆனால் காவாலா பாடல் ஜெயிலர் பட ப்ரமோஷனுக்கு நல்ல ஆரம்பமாக அமைந்தது.
காவாலா பாடலில் தமன்னாவின் நடனத்துடன் ரஜினியின் சிக்னேச்சர் ஸ்டைல், ஜானி மாஸ்டரின் நடன் வடிவமைப்பு என மொத்தமாக சேர்ந்து இந்த பாடலுக்கு மிகப்பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. குறிப்பாக, காவாலா பாடலுக்கு பல இளைஞர்கள் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டனர். பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா, பீஸ்ட் பட வில்லன் சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பல பிரபலங்கள் காவாலா பாடலுக்கு நடனமாடினர்.
மேலும், உலக அளவில் காவாலா பாடல் பிரபலமாகி ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி, காவாலா பாடலுக்கு நடனமாடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். மேலும், ஜெயிலர் படம் வெளியானபோது கதையின் வேகத்தை குறைக்காத வகையில் காவாலா பாடல் இடம் பெற்றிருப்பதாகவும், ரஜினியை காவாலா பாடலில் நெல்சன் நகைச்சுவையாகப் பயன்படுத்திய விதத்தையும் ரசிகர்கள் பாராட்டினர். இந்த நிலையில், காவாலா வீடியோ பாடல் இன்று (செப் 6) அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: “படத்தில் தயாரிப்பாளர்கள் தான் ரியல் ஹீரோஸ்” - நடிகர் சத்யராஜ்!