தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'ஜெயராம் சார் தான் என் குருசாமி, என் கடவுள்..!' - ஜெயம் ரவி - பொன்னி நதி

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ’பொன்னி நதி’ எனும் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

’ஜெயராம் சார் தான் என் குருசாமி, என் கடவுள்..!’ - ஜெயம் ரவி
’ஜெயராம் சார் தான் என் குருசாமி, என் கடவுள்..!’ - ஜெயம் ரவி

By

Published : Aug 1, 2022, 5:53 PM IST

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ’பொன்னி நதி’ எனும் பாடல் வெளியீட்டு விழா நேற்று(ஜூலை 31) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஜெயம் ரவி பேசியபோது, “உங்கள் அனைவரின் அன்பிற்கும் நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், நான், கார்த்தி, ஜெயராம் சார் மூவரும் சேர்ந்து நடிக்கும் போது மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? மக்களின் ஆரவாரம் எப்படி இருக்கும்? மக்கள் எப்படி ரசிப்பார்கள் என்று சிந்தித்துக்கொண்டு தான் நடித்தோம்.

ஆனால், இன்று சில காட்சிகளுக்கு நீங்கள் தந்த எதிர்வினைகள் ஒன்றே போதும். மிகவும் சந்தோஷமாக உள்ளேன். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளனர். நான் மிகவும் மதிப்பது தமிழ் ரசிகர்களைத் தான். ஏனென்றால், உலக சினிமா பார்க்கும் ரசிகர்களை நான் கடந்து வந்துள்ளேன்.

அவர்கள் அனைவரும் நல்ல படத்திற்கு, நல்ல இயக்கத்திற்கு, நல்ல இசைக்கு என்று தனி தனியாகத்தான் கைத் தட்டுவார்கள். ஆனால், தமிழ் ரசிகர்கள் மட்டும் தான் நல்ல ஷாட்டுக்குக்கூட கைத்தட்டி வரவேற்பளிப்பார்கள். அப்படி பார்த்தால் இந்த ஒரு பாட்டுக்கு மட்டுமல்ல படத்திலுள்ள ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் கைத்தட்ட வேண்டியிருக்கும். அந்த அளவிற்கு நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம்.

நமக்கு பிடித்த கார்த்தியும், ஏ.ஆர்.ரஹ்மான் சாரும், ரவிவர்மனும், பிருந்தா மாஸ்டரும் சேர்ந்து காட்சிப்படுத்திய பாடல் இது. இது நன்றாக வராமல் இருக்க எவ்வித வாய்ப்புகளும் இல்லை. நானும் கார்த்தியும் ஒவ்வொரு நாளும் எந்தளவு கஷ்டப்பட்டோம் என்பதை சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

'குதிரை என்றால் பயம்':இன்று ஜெயராம் சாரும் அதைச்சொன்னார். குதிரைப்பயிற்சி செய்வதற்காக எங்களை 3 மணிக்கெல்லாம் எழுப்பி விடுவார்கள். எனக்கு குதிரை என்றால் பயம். அப்போதெல்லாம் கார்த்தி தான் என்னை அழைத்து “வா மச்சி... நான் கூட்டிட்டுப்போறேன்” எனச்சொல்லி என்னை அழைத்துச்செல்வார். கார்த்தி எனக்கு மிகவும் உதவி செய்தார். எனக்கு ஊக்கமளித்தார். கார்த்தி போன்ற ஒரு நண்பன் கிடைப்பது கடினம்.

ஒருநாள் நான் ஹோட்டலில் இருக்கும் போது கார்த்தி குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டார் என்றார்கள். எனக்கு ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை. அதன் பின் சிறிது சுயநலமாக சிந்தித்தேன். கார்த்தியே குதிரையிலிருந்து விழுந்துவிட்டார் என்றால் நான் என்ன செய்யப்போகிறேன். ஆனால், மணி சார் அதை வேறு மாதிரி சிந்திப்பார். “என் பாடல் உனக்கு பிடிக்கவில்லை, அதனால் என்னைக்கீழே தள்ளிவிட்டாய்” என்று வசனம் சேர்த்துக்கொள்கிறேன் என்பார்.

'மணி சாரால் சாத்தியமானது':இப்படத்தில் நிறைய ஹீரோக்கள் உள்ளோம். நான், கார்த்தி, ஜெயராம் சார், விக்ரம் பிரபு, விக்ரம் சார், சரத் சார். இவர்கள் எல்லோரும் திரையில் தெரிபவர்கள். இப்போது, திரைக்குப் பின்னால் இருக்கும் ஹீரோக்களைப் பற்றி பேசுகிறேன். முதலாவதாக மணி சார், என்னுடைய ஹீரோவும் நம் அனைவருடைய ஹீரோவும் அவர் தான். இந்தப் படத்தை பலர் எடுப்பதற்கு ஆசைப்பட்டார்கள். பெரிய பெரிய ஜாம்பவான்கள் கூட இப்படத்தை எடுக்க நினைத்தார்கள். ஆனால், முடியவில்லை. இப்போது அதை மணி சார் மட்டுமே சாத்தியமாக்கியுள்ளார்.

இரண்டாவது ஹீரோ லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் சார். நாம் அனைவராலும் பேசப்பட்ட படம் “சந்திரலேகா”. அதன் பின் அதை விட பிரமாண்டமாக நாம் ஒரு படத்தை பார்க்கப்போகிறோம் என்றால், அதற்கு சுபாஷ்கரன் சார் மட்டும் தான் ஒரே காரணம். இந்தப் படமும் 'சந்திரலேகா' போல் பேசப்பட வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்.

மூன்றாவது ஹீரோ ரவிவர்மன் சார். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அவர் செதுக்கியுள்ளார் என்று சொன்னேன். அதை நீங்கள் படம் வெளியானவுடன் பார்க்கப்போகிறீர்கள். தோட்டா தரணி சார், இப்படத்தில் நிறைய கிராஃபிக்ஸ் இருந்தாலும், செட் போடுவதற்காக அவர் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இவர்களைப் போன்ற தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பணியாற்றியது எங்களுக்குக் கிடைத்த பெருமை என்று தான் நாங்கள் பேசிக்கொண்டிருப்போம்.

அதன் பின் அன்றும் இன்றும் எப்போதும் ஹீரோவாக இருக்கும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சார். கார்த்தியும் ஏ.ஆர்.ரஹ்மான் சாருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். எனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்ற கனவு இப்படத்தின் மூலம் தான் நிறைவேறியுள்ளது.

'ஜெயராம் சார் எனக்கு குருசாமி': மேலும், ஜெயராம் சாருடன் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. அவர் எனக்கு குரு சாமி, கடவுள் போன்றவர். அவருடன் இணைந்து சினிமா சம்பந்தமாக பேசிய விஷயங்கள் அனைத்தும் நான் எப்போதும் மறக்கமாட்டேன்.

இந்தப்படம் எனக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுத்தந்துள்ளது. சொல்லப்போனால், எங்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. இது மிகவும் சாதாரணமான படம் கிடையாது. எத்தனை முறை பேசினாலும் இதை நாங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும். இப்படத்திற்காக நாங்கள் நிறைய உழைத்துள்ளோம். நாங்கள் மட்டுமல்ல பல ஆயிரம் பேர் இப்படத்திற்காக உழைத்துள்ளார்கள்.

சிலர் தொழில் நுட்பத்துடன் படம் எடுப்பார்கள், சிலர் உணர்வுப்பூர்வமாக படம் எடுப்பார்கள், அதை எல்லாம் நாம் பார்த்துள்ளோம். ஆனால், 'பொன்னியின் செல்வன்' உங்களுக்காக எடுத்த ஒரு படம். ஒவ்வொரு காட்சியும் உங்களை நினைத்துக்கொண்டு தான் உருவாக்கியுள்ளோம். 'பொன்னியின் செல்வன்' புத்தகத்தை மனதில் சுமந்துகொண்டு எடுத்த ஒரு படம். ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம். கூடிய விரைவில் படம் வெளியாகவுள்ளது. இசைவெளியீட்டு விழாவில் மீண்டும் உங்களைச் சந்திக்கிறோம். அனைவருக்கும் நன்றி” எனப் பேசினார்.

இதையும் படிங்க: 'இறுதியில் எப்போதும் உண்மை தான் வெல்லும்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் குறித்து அறிவு!



ABOUT THE AUTHOR

...view details