தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கர்மா திருப்பி அடிக்கும் எனக்கூறும் ஜீவி இரண்டாம் பாக நாயகன் வெற்றி - ஜீவி இரண்டாம் பாகம்

நடிகர் வெற்றி நடிப்பில் இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜீவி 2 திரைப்படம் வருகிற ஆக 19ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது

கர்மா திருப்பி அடிக்கும்   ஜீவி இரண்டாம் பாகத்தின் நாயகன் வெற்றியின் நம்பிக்கை
கர்மா திருப்பி அடிக்கும் ஜீவி இரண்டாம் பாகத்தின் நாயகன் வெற்றியின் நம்பிக்கை

By

Published : Aug 12, 2022, 4:22 PM IST

கடந்த 2017இல் வெளியான ‘எட்டு தோட்டாக்கள்' படப்புகழ் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலகப் பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுகளை பெற்ற படம், ஜீவி. இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக ’ஜீவி-2’ தற்போது உருவாகியுள்ளது.

’மாநாடு’ என்கிற வெற்றிப்படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின், வி.ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. முதல் பாகத்தில் இடம்பெற்ற அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி உள்ளிட்ட கலைஞர்களும் அதே தொழில்நுட்பக்குழுவினரும் தான் இந்தப்படத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

ஒய்ஜி மகேந்திரன், நடிகர் நாசரின் சகோதரர் அஹ்மத் உள்ளிட்ட வெகு சிலர்தான் இந்த இரண்டாம் பாகத்தில் புதிதாக இணைந்துள்ளனர். வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்தப்படம் நேரடியாக "ஆஹா" ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் நாயகன் வெற்றி, இரண்டாம் பாகத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார். '' எட்டு தோட்டாக்கள், ஜீவி, ஜீவி 2 என கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சீரியஸான படங்களிலேயே நீங்கள் நடிக்கிறீர்களே?! எனக் கேட்கிறார்கள்..,

அப்படி படம் பண்ணினால் தானே கூட்டத்தைக்கூட்ட முடியும்? முதலில் ஒரு பார்வையாளராக, படம் பார்க்கும்போது எனக்கு போர் அடிக்காமல் இருக்க வேண்டும்.. நாலு நண்பர்கள், ஒரு காதலி, டூயட் இவற்றுடன் வலுவான கதையும் இருந்தால் அதிலும் நடிப்பதற்கு எனக்குத் தயக்கம் இல்லை. நான் தற்போது நடித்துவரும் ’பம்பர்’ படம் அப்படிப்பட்ட ஒன்றுதான்.

ஜீவி-2 எடுக்கப்போகிறோம் என்று சொன்னதுமே எல்லோருமே சொன்ன ஒரே பதில் ‘நாங்கள் வெயிட்டிங்’ என்பதுதான்..!, ’ஆஹா’ ஓடிடி தளத்தில் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் போல் இதுவும் ரசிகர்களை இழுத்துக்கொள்ளும். படத்தில் இடம் பெற்றுள்ளது போல ’முக்கோண விதி’, ’தொடர்பியல்’ போன்ற விஷயங்களை நிஜத்தில் நான் உணர்ந்ததில்லை. ஆனால், கர்மா என ஒன்று இருப்பதையும் நாம் ஏதாவது தவறு செய்தால் நமக்கு அது திருப்பி அடிக்கும் என்பதையும் நம்புகிறேன்.

அதே சமயம் ஜீவி படம் பார்த்துவிட்டு நிறைய பேர், தங்கள் வாழ்க்கையில் இதுபோன்று நிகழ்வுகள் நடந்திருப்பதாக கூறியபோது ஆச்சரியப்பட்டேன். ’ஜீவி - 2’ படப்பிடிப்பை திட்டமிட்டு அழகாக, அதே வேளையில் படத்தின் பிரமிப்பில் குறைவில்லாமல் முடித்துள்ளோம். இந்தப் படத்தில் நடித்தது ஒரு ரீ-யூனியன் போல தான் இருந்தது.

எங்கள் குழு "ஜீவி" இவ்வளவு வரவேற்பு பெறும் என்றோ... அதற்கு இரண்டாம் பாகம் உருவாகும் என்றோ நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை என்று கூறி, தங்களது வியப்பை வெளிப்படுத்தினார்கள். ஒய்ஜி.மகேந்திரன் போன்ற சீனியர் நடிகருடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

முதல் பாகத்தில் போலீஸ் அலுவலராக இடம் பெற்ற மலையாள நடிகர் அனில் முரளியின் மறைவு துரதிர்ஷ்டவசமானது. அவருக்குப் பதிலாக அந்த கதாபாத்திரத்தில் இந்தப்படத்தில் நடிகர் நாசரின் சகோதரர் அஹ்மத் நடித்துள்ளார்.

லாக்டவுன் சமயத்தில் தான் ஜீவி-2 எடுக்கலாம் என இயக்குநர் கோபி முடிவு செய்தார். அதே சமயம், இந்தப்படத்தின் முதல் பாகத்திற்கு கதை எழுதிய பாபு தமிழ், அடுத்ததாக புதிய படம் இயக்கும் வேலைகளில் இறங்கிவிட்டதால் ’’ஜீவி 2’’ படத்தில் அவரால் பங்களிக்க இயலவில்லை. அதனால், கோபிநாத்தே இந்த முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதிவிட்டார்.

இப்போது ஜீவி-2 முடிந்ததுமே இதற்கு மூன்றாம் பாகம் உருவாகுமா என பலரும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப் படத்திற்கு கிடைக்கும் ரசிகர்களின் வரவேற்பும் விமர்சனங்களும் தான் அதை முடிவுசெய்ய வேண்டும். இந்தப் படத்தில் நடித்து முடித்தபோது ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை மிக திருப்தியாக முடித்துள்ளோம் என்கிற எண்ணம் தான் எழுந்தது. மீண்டும் இதே குழுவுடன் இணைந்து இன்னொரு படத்தில் பணியாற்றும் ஆசையும் இருக்கிறது. ஆனால், அது மூன்றாம் பாகமா என்பது தெரியாது” என சஸ்பென்ஸ் வைத்து முடிக்கிறார், நடிகர் வெற்றி.

இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டிகளில் வென்ற வீரர்களை வாழ்த்திய பிரபாஸ்..!

ABOUT THE AUTHOR

...view details