சென்னை:தமிழ் திரையுலகில் தனித்துவமான மற்றும் ரசனைமிக்க படங்கள் மூலம், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகர் ஜெயம் ரவி. முன்னதாக இவர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.
மேலும், நடிகர் ஜெயம் ரவி முதல் முறையாக 'சைரன்' படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்திருக்கிறார். முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம், நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு, முதிர்ந்த தோற்றத்தில் கைதியாக ஜெயம் ரவி இருப்பதை போன்ற ஃபரஸ்ட் லுக் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. அது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இந்நிலையில், 'சைரன்' படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. அதில் ஜெயிலில் கைதியாக இருக்கும் ஜெயம் ரவி குரலில் கூறப்படும் ஒரு கதையும், அதற்கு இணையாக கீர்த்தி சுரேஷ் குரலில் மற்றொரு கதையும் என இரண்டு கதாபாத்திரங்களின் கூறும் கதைகள் படத்தின் மையக்கதையை விவரிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான திருப்பங்களுடன், அதிரடி அக்ஷன் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ ஆகிய படங்களில் எழுத்து துறையில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் 'சைரன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.