சென்னை: தமிழ் சினிமாவில் அவ்வப்போது சிறிய பட்ஜெட் படங்கள் மிகப்பெரிய கருக்கதையோடு வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிடும். அப்படிப்பட்ட படமாக தான் இந்த வாரம் வெளியாக உள்ளது 'பெல்' திரைப்படம். அறிமுக இயக்குனர் வெங்கட் புவன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், மறைந்த நடிகர் நித்தீஷ் வீரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை பீட்டர் ராஜ் தனது ப்ரோகன் மூவிஸ் மூலம் தயாரித்துள்ளார். இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் பற்றியும், பழந்தமிழர்களின் மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புகள் பற்றியும் பேசும் படமாக 'பெல்' திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதில் குருசோம சுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நித்தீஷ் வீரா, பீட்டர் ராஜ், துர்கா, ஸ்வேதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பரணி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராபர்ட் இசை அமைத்திருக்கிறார். மேலும் இப்படம் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. இந்த படத்தைப் பார்த்த அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் நடிகர் குரு சோமசுந்தரம் பேசியதாவது, "எனக்கு பத்திரிகையாளராக வேண்டும் என்று ஆசை இருந்தது. ஏனென்றால் நான் நிறைய நாவல்கள் படிப்பேன். குறிப்பாக ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திர குமார், கிரைம் நாவல்கள் அதில் பத்திரிகையாளர் கதாபாத்திரம் வருவதை பார்த்து பத்திரிகையாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால் பத்திரிகையாளர்கள் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறேன் என்றார்.
பட தயாரிப்பாளர் பீட்டர் ராஜுக்கு எனது வாழ்த்துகள். போட்ட முதலீடு அவருக்கு திரும்ப கிடைக்கணும். பெல் பட கதையை இயக்குனர் புவன் கூறும் போதே பிடித்தது. ரொம்ப பொடன்ஷியல் உள்ள கதை. எனது கதாபாத்திரம் வித்தியாசமான பார்வை கொண்டது என்பது தெரிந்தது. அதனால் தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படத்திற்கு இசையும் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் கண்டிப்பாக இப்படம் வெற்றி பெறும் . அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவு தேவை" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் புவன் பேசியதாவது, "படத்தை எடுக்க தயாரிப்பாளர் முக்கியம். பீட்டர் ராஜ் எனது நண்பர், அவர் இப்படத்தை எடுங்கள் நான் தயாரிக்கிறேன் என்றார். மனதில் எனக்கு ஒரு பயம் இருந்தது. நம்மை நம்பி படமெடுக்கிறார், படம் நன்றாக வரவேண்டும் என்று எண்ணினேன். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நல்ல பட தர வேண்டும் என்று ரொம்பவும் ஆராய்ந்து இந்த கதையை தேர்வு செய்தோம். அவர் ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் படத்தின் உதவி இயக்குநர் போல் என்னுடனேயே இருந்து எல்லா பணிகளிலும் உதவினார்.
இன்று வரை அவர் உடனிருந்து எல்லாவற்றையும் செய்து தருகிறார். அவர் எனக்கு கடவுள் கொடுத்த பரிசுதான். அவருக்கு என் நன்றி. இந்த படத்தை புரோகன் மூவிஸ் பீட்டர் ராஜ், டேவிட் ராஜ் தயாரித்திருக்கிறார்கள். படத்தின் கதை மற்றும் வசனத்தை வெயிலோன் எழுதி உள்ளார். அவரும் எனது நண்பர் தான். தமிழில் நிறைய விஷயங்கள் மறைந்து கிடக்கிறது. வெயிலோன் மிகப் பெரிய தமிழ் விரும்பி. நிறைய படிப்பார், பேசுவார்.