வெகுஜன மக்களின் பொழுதுபோக்குகளில் சினிமா எப்போதும் முதலிடத்தை பிடிக்கும். சினிமா என்பது பெரும் பணமும், புகழும் எளிதில் கிடைக்கக் கூடிய துறையாகும். கடந்த 50 வருட இந்திய சினிமாவை வைத்து பார்த்தால் அதிகமாக இந்தி, தமிழ், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்தியது என்றே கூறலாம். காரணம் அந்தந்த மொழிப் படங்களை சார்ந்த ஒரு சில நடிகர்களின் திரைப்படங்களை தவிர குறிப்பிட்ட மொழித் திரைப்படங்கள் இந்த ஜானரை சார்ந்து தான் இருக்கும் என்ற பொதுவான கருத்து மக்களிடம் அதிகமாக இருந்தது.
குறிப்பாக பார்த்தால் மலையாள சினிமாவில் 2000ஆம் ஆண்டு வரை ஆபாச திரைப்படங்கள் அதிகமாக வெளிவரும் என்ற கருத்து அண்டை மாநில சினிமா ரசிகர்கள் இடையே பரவலாக நிலவியது. அதே நேரத்தில் மோகன்லால், மம்முட்டி ஆகியோரின் படங்களான மணிச்சித்ரதாழ், ஸ்படிகம், க்ரீடம், விதேயன் உள்ளிட்ட திரைப்படங்கள் இந்திய அளவில் பேசப்பட்டது.
மோகன்லால், சுரேஷ் கோபி, ஷோபனா நடித்த மணிச்சித்ரதாழ் திரைப்படம் தமிழில் ரஜினிகாந்த், ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் ’சந்திரமுகி’ யாக ரீமேக் செய்யப்பட்டது. 2007இல் வெளியான இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் வசூல் சாதனையில் மைல்கல்லாக அமைந்தது. அதேபோல 1989இல் மலையாளத்தில் வெளியான க்ரீடம் திரைப்படம் தமிழில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ’க்ரீடம்’ என்ற அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
ஆனால் சினிமா என்பது அதிக நிதியை கொண்ட கலை வடிவம் என்பதால் அதன் வணிக கணக்குகளை புறக்கணித்து விட முடியாது. இன்னும் சொல்லப் போனால் பாடல், சண்டைக் காட்சிகள் நிறைந்த கமர்ஷியல் படங்களுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பதுண்டு. ஆகையால் மலையாள சினிமாவும் தங்களை வணிக ரீதியாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக கமர்ஷியல் பாதையை நோக்கி பயணிக்க தொடங்கியது. அதனால் மலையாள சினிமாவில் இயல்புத்தன்மையும் மண் சார்ந்த அழகியலும் மெல்லக் குறைய தொடங்கியதால் மக்களிடையே வரவேற்பு குறைவாக இருந்தது.
பின்னர் 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “த்ரிஷயம்” திரைப்படமும் 2015ஆம் ஆண்டு வெளியான “பிரேமம்” திரைப்படமும் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது என்றே கூறலாம். இன்று வரை இந்திய சினிமாவில் வெளிவந்த சிறந்த க்ரைம் த்ரில்லர் படங்களில் ஒன்றாக த்ரிஷயம் படத்தை எடுத்துக்காட்டாய் கூறலாம். ஒரு கதாநாயகனின் வாழ்க்கையில் மூன்று பருவங்களில் காதல் கதையான பிரேமம் திரைப்படத்திற்கு கேரளாவில் கிடைத்த வரவேற்பை விட தமிழ்நாட்டில் கொண்டாடியவர்கள் தான் அதிகம். மலர் டிச்சரை காதலிக்காத இளைஞர்களே தமிழ்நாட்டில் இல்லை எனக் கூறலாம். சென்னையில் மட்டும் பிரேமம் திரைப்படம் 250 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது.
அதன் பிறகு மலையாள சினிமாவில் பல்வேறு ஜானர் திரைப்படங்கள் வெளியானது. வினித் ஸ்ரீனிவாசன் இயக்கிய தட்டத்தின் மரயத்து, ஜகோபிண்டே சுவர்கராஜ்யம், ஹ்ருதயம். அஞ்சலி இயக்கிய பெங்களூர் டேஸ், உஸ்தாத் ஹோட்டல், கூடே. லிஜோ ஜோஸ் இயக்கிய அங்காமலே டைரீஸ், ஜல்லிக்கட்டு, சமீபத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம். மகேஷ் நாராயணன் இயக்கிய டேக் ஆஃப், சி.யூ.சூன், மாலிக் என தூய கலை சார்ந்த படைப்புகள், வணிக ரீதியான திரைப்படங்கள் கலந்த கலவையாக வெற்றிப்பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது மலையாள சினிமா.
மேலும் ப்ரித்விராஜ், ஃபகத் பாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி, விநாயகன், பார்வதி, டொவினோ தாமஸ் உள்ளிட்ட நடிகர்கள் நாயக பிம்பத்தை உடைத்து கதைக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களில் நடித்து மலையாள சினிமா வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றனர். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஃபகத் பாசில், துல்கர் சல்மான், பார்வதி ஆகியோர் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தற்போது இந்திய சினிமாவில் அனைவராலும் விரும்பப்படும் நடிகர்களாக மாறிவிட்டனர் என்று சொல்லலாம். ஃபகத் பாசில் தனது துறுதுறுப்பான கண்கள் மூலம் நவரசங்களை வெளிப்படுத்தி பார்வையாளர்களை ஈர்க்கும் திறன் கொண்டவர்.
இவரது நடிப்பு திறனுக்கு எடுத்துக்காட்டாய் மகிஷிண்டே ப்ரதிகாரம், தொண்டிமுத்தாலும் த்ரிக்ஷாஷியும், கும்பலாங்கி நைட்ஸ், ட்ரான்ஸ், மாலிக் என படங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். துல்கர் சல்மான் மலையாளத்தில் நட்சத்திர நடிகர் மம்முட்டியின் மகன் என்ற பிம்பத்தை உடைத்து கடந்த சில ஆண்டுகளில் சீதா ராமம், குரூப், சுப் என பல மொழிப் படங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார்.
நடிகை பார்வதி சார்லி, என்னு நிண்டே மொய்தீன், மரியான், பெங்களூர் டேஸ் என பல படங்களில் தனது வித்தியாசமான கதாபாத்திர தேர்வு மூலம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். பல நடிகைகள் ஏற்று நடிக்க தயங்கும் ஆசிட்டால் தாக்கப்பட்டு சிதைந்த முகத்தோடு ’உயரே’ படத்தில் பார்வதி ஏற்று நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.