கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் 2001ஆம் பிப்ரவரி 2ஆம் தேதி ஆண்டு மின்னலே திரைப்படம் வெளியானது. இவர் இயக்கிய முதல் திரைப்படமே திரையுலகினர் மத்தியிலும், சினிமா ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. புதிய ட்ரெண்ட் உருவானது. இயக்குநர் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் “நான் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் மின்னலே படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் இசை எனக்கு புத்துணர்ச்சியை தந்தது. நாங்கள் காதல் காட்சிகளை படமாக்கும் முன்னர் கௌதம் மேனன் படங்களின் காதல் காட்சிகளை பார்ப்போம். நான் புகைப்பழக்கத்தை கைவிட வாரணம் ஆயிரம் முக்கிய காரணமாக இருந்தது என்று கூறியிருப்பார்.
இப்படி பல வகையில் தனது திரைப்படங்களின் காட்சிகளின் மூலமாக பார்வையாளர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவர் கௌதம் மேனன். இவரது திரைப்படங்களில் பெரும்பாலும் எளிதான கதை களமே இடம்பெற்றிருக்கும். சில படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் அவரது காட்சியமைப்புகளை ரசிகர்கள் தங்களது மனதுக்கு நெருக்கமாக உணர்வதால் கௌதம் மேனனுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
ஒரே மாதிரியான அனைத்து படங்களை இயக்குகிறார் என்று அவர் மீது விமர்சனங்கள் எழுந்தாலும், அவர் ஒவ்வொரு படங்களின் திரை மொழியிலும் பல விதமான மாற்றங்கள் இருக்கும். உதாரணத்திற்கு வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் படத்தின் கதையில் ஒரு சில ஒற்றுமைகள் இருந்தாலும் திரைக்கதையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். கௌதம் மேனன் தனது எல்லைகளை தாண்டி வித்தியாசமான கதைக்களத்தோடு சமீபத்தில் சிலம்பரசனை வைத்து இயக்கிய படம் ’வெந்து தணிந்தது காடு'. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குநர் மணிரத்னத்திற்கு பிறகு காதல் காட்சிகளுக்கு என வகுக்கப்பட்ட டெம்ளேட்களை உடைத்து, தனது கேஷ்வலான மாண்டேஜ் காதல் காட்சிகள் மூலம் பாடல்களுக்கு அழகு சேர்ப்பதில் கௌதம் மேனனிற்கு தமிழ் சினிமாவில் தனி இடமுண்டு .