சென்னை: இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் நடிகர் சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து உதயநிதி நடிப்பில் 'இது கதிர்வேலன் காதல்', 'சத்ரியன்', மீண்டும் சசிகுமார் உடன் 'கொம்பு வெச்ச சிங்கம் டா' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இவர் முதல் முறையாக ஜீ 5 ஓடிடி தளத்திற்கு இணைய தொடர் இயக்கியுள்ளார். இதனை அபி & அபி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த இணைய தொடரில் கலையரசன், வாணி போஜன், ஷாலி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அரசியல் கதைக்களம் கொண்ட இந்த இணைய தொடர் 8 எபிசோடுகளை கொண்டுள்ளது. கடந்த வெள்ளியன்று வெளியான இந்த இணையத் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
மேலும் அரசியல் கதைக்களமான இது கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் பற்றி எடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் 'செங்களம்' அரசியல் சம்பந்தமான தொடர் என்பதால், தமிழக அரசியல் ஆளுமைகளின் நினைவிடங்களுக்கு சென்று, மாலையிட்டு மரியாதை செய்ததுடன், தூய்மை பணியாளர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி இந்த இணையத்தொடரின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
தமிழின் முதல் அரசியல் சம்பந்தமான முழு நீள இணையத்தொடராக வெளியாகியுள்ள செங்களம், அரசியலின் கோர முகத்தையும், அரசியல்வாதிகளின் மறுபக்கத்தையும் படம் பிடித்துக் காட்டியுள்ளது. இதுவரையிலான திரை வரலாற்றில் அரசியல்களம் எப்படி இருக்கும் அரசியலுக்குள் பதவிக்காக நிகழும் போட்டி, பொறாமை, துரோகம் என ஒரு முழு நீள அரசியல் களத்தை நெருக்கமாக அணுகிய வகையில் மிக முக்கிய படைப்பாக மாறியிருக்கிறது 'செங்களம்' என விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.
விமர்சகர்கள் மற்றும் ரசிர்களிடம் ஒரு சேர வரவேற்பை குவித்துள்ள இத்தொடர், வெளியானதிலிருந்தே, ZEE 5 தளத்தில் பெரும் எண்ணிக்கையிலான பார்வைகளை குவித்து வெற்றி பெற்றுள்ளது. 'செங்களம்' தொடருக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன், நடிகை ஷாலி நிவேகாஸ் மற்றும் நடிகர் டேனியல் முதலான படக்குழுவினர் திங்கட்கிழமை முன்னாள் முதலமைச்சர்கள் சி.எண்.அண்ணாதுரை, மு.கருணாநிதி, டாக்டர் எம்ஜிஆர், ஜெ.ஜெயலலிதா மற்றும் இறுதியாக காமராஜர் நினைவிடங்களில் நேரில் சென்று, மலர் தூவி மரியாதை செய்தனர்.
அதன் பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி, இணையத்தொடரின் வெற்றியை கொண்டாடினர். இந்த தொடரில் சில விஷயங்களை மறைமுகமாக வைத்துள்ள இயக்குநர், இந்த தொடரின் முதல் சீசன் வெற்றி பெற்றுள்ளதால் இதன் இரண்டாவது சீசனை எடுக்கும் திட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன்-2 டிரைலர் வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு