16 years of Karthism: பருத்திவீரன் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாட்டம் சென்னை: சினிமா ஆசையில் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும், சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது, நடிகர் கார்த்தி நடித்த பருத்திவீரன். அமீர் இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் தற்போது 16 வருடங்களைக் கடந்துள்ளது. இந்தப் படம் நடிகர் சிவகுமாரின் மகன் கார்த்தி என்ற பிம்பத்தை உடைத்து நடிகராக கார்த்தியை ரசிகர்கள் மனதில் இடம்பெறச் செய்தது.
பருத்திவீரன் படம் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் விதமாக கார்த்தி ரசிகர்கள் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சென்னை பாடியில் உள்ள கிரீன் சினிமாஸ் தியேட்டரில் 'பருத்திவீரன்' திரைப்படம் திரையிடப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
மேலும் பருத்திவீரன் படம் வெளியாகி 16ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானமும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டன. மேலும் பல்வேறு திரைப்பிரபலங்கள் 'ஜப்பான்' திரைப்படத்தில் கார்த்தியின் தோற்றத்தை தங்களது சமூக வலைதளத்தில் புகைப்படமாக வைத்து '16 years of Karthism' என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டனர்.
கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு சர்தார் திரைப்படம் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில், கார்த்தி நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தி நடித்த ‘வந்தியத்தேவன்’ கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலுக்கு படையெடுக்கும் திரைப் பிரபலங்கள் - காரணம் என்ன?