சென்னை:நடிகர் துல்கர் சல்மான் தமிழ் மற்றும் மலையாளத்தில் இளம் நடிகராக வெற்றி நடை போடுபவர். இவரது படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதால் பல தரப்பட்ட ரசிகர்களையும் தனது அருகில் வைத்துள்ளார். தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இவரது வாயை மூடி பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓகே கண்மணி உள்ளிட்ட படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில், ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் வே ஃபாரர் பிலிம்ஸ் தயாரிப்பில் துல்கர் சல்மான் 'கிங் ஆஃப் கோதா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'கிங் ஆஃப் கோதா' படத்தின் ஒவ்வொரு அறிவிப்பையும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இறுதியாக தற்போது இப்படத்தின் ரத்தம் தெறிக்கும் அதிரடியான டீசரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
டீசரில் கோதா மக்கள் அரசனைக் காண்பது போல் மொத்தமாக ஒதுங்கி நின்று துல்கர் சல்மான் காருக்கு வழி விடுகின்றனர். ஸ்டைலான பழம்பெருமை மிகுந்த மெர்சிடிஸ் காரில் துல்கர் சல்மான் வருவதைப் பார்க்கும்போது, நம் மொத்த கவனமும் அவர் மேல் குவிகிறது. மன்னிக்கத் தெரியாத வன்முறையாளனாக, இரக்கமற்ற கொடூரனாக கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார் துல்கர் சல்மான். இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, பிரசன்னா, அனிகா சுரேந்தர், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க:வாங்கி கட்டிய பின்னர் திருந்திய லியோ படக்குழு.. 'நா ரெடி' பாட்டில் எச்சரிக்கை வாசகம் சேர்ப்பு!