சென்னை: நடிகர் விஜய் கோலிவுட்டின் வசூல் மன்னனாக திகழ்பவர். இவரது நடிப்பில் கடைசியாக வாரிசு படம் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரித்துள்ளார்.
லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதனால் லியோ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இது லோகேஷ் கனகராஜின் எல்சியு யுனிவர்சில் இணையுமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா, கௌதம் மேனன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோரது பிறந்த நாளுக்கு அவர்களது கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியான நிலையில் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. இதனையடுத்து விஜய்யின் 68வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
யாரும் எதிர்பாராத வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தை நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். ஏனென்றால் வெங்கட் பிரபு படம் என்றால் கலகலப்பும் ஆக்சனும் கலந்ததாக இருக்கும். ஏற்கனவே அஜித்தை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படம் மெகா ஹிட்டடித்தது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
விஜய் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தளபதி 68 திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட்டிற்காக விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். இதன் புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது நடிகர் விஜய் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள திரையரங்கு ஒன்றில் ஈக்வலைசர் (Equalizer) திரைப்படத்தை பார்த்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் திரையில் தோன்றும் நடிகர் டென்சல் வாஷிங்டனை ரசித்த தருணத்தை thalapathy Fan Boy moment என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இணையத்தில் பகிர்ந்துள்ளார். ’தளபதி 68’ படத்திற்காக நடிகர் விஜய்யின் புதுமையான தோற்றத்தை 3D கதாபாத்திரத்தில் உருவாக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. இதற்கு முன் அவதார் உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்கள் இங்கு தான் உருவாக்கப்பட்டன. ஒரு இந்திய படம் இந்த ஸ்டூடியோவில் உருவாக்கப்படுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 18 years of Tamannah: ’கேடி முதல் காவாலா வரை’.. ரசிகர்கள் அன்புக்கு நன்றி தெரிவித்த தமன்னா!