சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் தங்கலான். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட கஷ்டங்களை முக்கிய கருவாகக் கொண்டு தயாராகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (நவ. 1) சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் பா.ரஞ்சித், விக்ரம், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், தனஞ்செயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் பா.ரஞ்சித் மேடையில் பேசுகையில், "இந்த டீஸர் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன்.
இது ஒரு சிறிய முன்னோட்டம் தான். நிறைய பேச வேண்டியது இருக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் நிறைய அதிகரித்தது ஆனால் ஞானவேல் கோவமாக கூட பார்க்கவில்லை. என்மீது நம்பிக்கை வைத்துள்ளார். அந்த உறவை இப்படம் உறுதிபடுத்தும். அவர் கமர்ஷியல் தயாரிப்பாளர். டீஸரில் அவரை திருப்திபடுத்த மிகவும் கஷ்டப்பட்டேன். அவருக்கு டீஸர் பிடித்துள்ளது என்றார்.
விக்ரமை நான் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்து எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு நடிகராக அவரிடம் பெரிய மதிப்பு இருக்கிறது. நான் மிகவும் ஆசையாக இருந்தேன் அவருடன் பணியாற்ற வேண்டும் என்று. ஒரு நடிகராக அந்த கதாபாத்திரத்திற்கு செய்யும் நடிப்பை நியாயமாக பார்கிறேன். அது கஷ்டப்படுவதாக தெரியவில்லை. எதற்கு இப்படி மெனக்கெடுகிறீர்கள் என்று விக்ரமிடம் கேட்டேன்.