சென்னை:திரைப்பட இயக்குநரான பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் என்ற பெயரில் பல பண்பாட்டு நிகழ்வுகளை நடத்தி வருகிறார். அந்த வகையில், நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த மார்கழியில் மக்களிசை வருடா வருடம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மேலும், பல்வேறு இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு, மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
அந்த வகையில், இந்த வருடம் 2023ஆம் ஆண்டிற்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி, நேற்று (டிச.23) கே.ஜி.எப்-ல் உள்ள நகராட்சி மைதானம், ராபர்ட்சன்பேட்டையில் முதல் நிகழ்ச்சியாகக் கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் சென்னை, மதுரை, கோவை என பல ஊர்களில் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சி, இந்த வருடம் கே.ஜி.எப் (டிச.23), ஓசூர் (டிச.24) மற்றும் சென்னையில் (டிச.28.29,30) நடைபெறுகிறது.
கே.ஜி.எப்-ல் நடந்த இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் பா. இரஞ்சித் சிறப்புரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, “கே.ஜி.எப் மக்களின் அன்பு என்னை வியக்க வைக்கிறது. தொடர்ந்து இந்த மக்களோடு பயணிக்க விரும்புகிறேன். கலை மக்களை ஒருங்கிணைக்கும். பாபா சாகேப் அம்பேத்கர் வழியில் நாம் பெரும் புரட்சியாக அணிதிரள்வோம்” என்றார்.