திரை உலகில் நடிகர்களின் கைகள் ஓங்கி இருந்த காலகட்டத்தில் உண்மையாக ஒரு படைப்பாளிக்குத்தான் முழு அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக பரவி வந்தது அப்போது. எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி இப்போது வரை கதாநாயக துதி அதிகரித்துக் காணப்பட்டாலும் அவ்வப்போது இயக்குனரின் புகழும் சற்று பேசப்படுகிறது என்றால் அதில் புரட்சி நடத்தியவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர். இன்று அவருக்கு 92வது பிறந்தநாள்.
அவர் இயக்கத்தில், ஓடிய படங்கள், ஓடாத படங்கள் என்றிருக்கலாம். நல்லபடம், சரியில்லாத படம் என்றிருக்காது. எந்தப் படமாக இருந்தாலும், அதில் ‘பாலசந்தர் படம்’ என்று சொல்லுவதற்கான விஷயங்களை ஆங்காங்கே தூவியிருப்பார். அதை இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இது கே.பி.படம் என்று திரையரங்குகளை நோக்கி சென்றவர்கள் பலர் உண்டு அக்காலத்தில். அவர்களை கே.பாலச்சந்தர் ஒருபோதும் ஏமாற்றியதுமில்லை.
இதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் அதிக அளவில் நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்தது பாலசந்தராகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட 65க்கும் மேற்பட்டவர்களை அறிமுகப்படுத்தி, இதில் பெரும்பான்மையான நடிகர்களை நம் மனதில் நிற்கவைத்தும் சாதித்தவர் பாலசந்தர். எம்ஜிஆர் - சிவாஜிக்குப் பிறகான அந்த இடத்தை, கமல் - ரஜினியை உருவாக்கி நிரப்பியர் பாலசந்தர் தான்.
கலையுலகில் கற்பனை வறட்சியோடு சிலர் படமெடுத்துக்கொண்டு இருந்த சமயத்தில் தனது புரட்சி படங்களின் மூலம் கம்பீரப் புரட்சியாளராகத் திகழ்ந்தார் பாலசந்தர். ஆரம்ப காலத்தில் ஏராளமான நாடங்களில் பணியாற்றினார். நாடகங்களில் கற்றுக்கொண்ட பாடங்கள், பெற்ற நெறிமுறைகள், வரைமுறைகள், வழிமுறைகள்தான் சினிமாவிலும் இவரை சாணக்கியராக்கியது.
ஆரம்பத்தில் இவரது படங்கள் நாடகத்தனமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக சினிமா கற்றுக்கொண்டு வெற்றிபெற தொடங்கினார். இரு கோடுகள்', 'பூவா தலையா?', 'பாமா விஜயம்', 'தாமரைநெஞ்சம்', 'புன்னகை', 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'அரங்கேற்றம்', 'அவள் ஒரு தொடர்கதை' உள்ளிட்ட படங்கள் மூலம் தன்னையும் தமிழ் சினிமா ரசிகர்கள் தரத்தையும் உயர்த்தினார். பெண்களை மையப்படுத்தி படங்கள் எடுத்துள்ளார்.