சென்னை: தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான, எதார்த்தமான படங்களின் மூலம் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டவர், இயக்குநர் பாலா. இவரது இயக்கத்தில், 'வணங்கான்' என பெயரிடப்பட்ட படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. பின்னர், அத்திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகுவதாக அறிவிப்பு வெளியானது.
இதனையடுத்து, வணங்கான் படத்தை அருண் விஜய்யை வைத்து இயக்குவதாக பாலா தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுத, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது.