சென்னை:நடிகர் தனுஷ் ‘துள்ளுவதோ இளமை’ தொடங்கி ‘வாத்தி’ வரை தனது நடிப்பு திறமையால் ஒரு முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். அதோடு ஹாலிவுட் சினிமா வரை உயர்ந்து நிற்கிறார். தனது ஆரம்ப கால படங்களில் இருந்தே தனது அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ‘திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ என இரண்டு படங்கள் வெளியானது.
இந்த ஆண்டு முதல் முறையாக தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழில் ‘வாத்தி’ என்றும் தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் இப்படம் உருவானது. கடந்த மாதம் 17ஆம் தேதி இப்படம் வெளியானது. தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருந்தார். ஜிவி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார்.
இப்படம் கல்வி தனியார்மயம் ஆகுவதை பற்றி பேசியது. ஒவ்வொரு மாணவர்களும் பார்க்க வேண்டிய படமாகவும் இப்படம் இருந்தது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்தும் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இப்படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது தனுஷ் திரை வாழ்வில் மற்றுமொரு மைல் கல்லாகும். இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படமும் 100 கோடி ரூபாய் வசூலித்தது.