சென்னை:இந்திய சினிமாவில் தமிழ் சினிமா சற்று வித்தியாசமானது. ஒன்றுமே இல்லாமல் வந்தாலும் இங்கே நீ ராஜாவாகலாம். நீ ராஜாவாக இருந்தாலும் உன்னை கீழிறக்கி விடும் சக்தி கொண்டது, தமிழ் சினிமா. இதில் ஒருவன் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுகிறான் என்றால், அதற்கு திறமை மட்டும் போதாது. கடினமான, அசுரத்தனமான உழைப்பு இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
அப்படி தனது அபாரமான நடிப்பு ஆற்றல் மற்றும் கடின உழைப்பால் ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்து இருப்பவர்தான் நடிகர் தனுஷ், இன்று தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை தனுஷின் ரசிகர்கள் சிலாகித்து கொண்டாடி வருகின்றனர். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு தனுஷே இதை நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார்.
ஒல்லியான தேகம், பல்லி நடிகர், குச்சி நடிகர் என்று பத்திரிகைகளே இவரை பற்றிய விமர்சனங்களை எழுதியது. அப்போது எல்லாம் மனமுடைந்து அழுது இருக்கிறேன் என்று ஒருமுறை பேட்டியில் தனுஷ் கூறியிருந்தார். ஆனால், இவரிடமும் ஒரு திறமை இருக்கிறது என்று பாலு மகேந்திரா கண்டறிந்தார். புதுப்பேட்டை படத்தில் 'தோ பார்ரா இது இன்னும் நிக்குது' என்று கூறி சுற்றியிருப்பவர்கள் கலாய்த்து சிரித்துக்கொண்டிருப்பார்கள்.
அப்போது தனுஷ் ரத்த வெள்ளத்தில் போராடிக் கொண்டிருப்பார். அதில் சிரித்தவர்கள் கடைசியில் தனுஷிற்கு கைதட்டுவார்கள். அப்படித்தான் முதலில் இவனெல்லாம் யார் என்று தள்ளிய திரையுலகம், தற்போது தலையில் வைத்துக் கொண்டாடுகிறது. இந்த காட்சியை தனுஷின் ஆரம்பகால திரையுலக வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும். ஆனால், அப்படி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கிக்கொண்ட கலைஞன்தான் தனுஷ்.
என்னதான் அண்ணன், அப்பா தயவில் சினிமாவிற்கு வந்தாலும் தனித்திறமை இருந்தால்தான் சினிமாவில் வெற்றி பெற முடியும். அதற்கு உதாரணம் இவர். தனுஷின் சமரசமில்லாத உழைப்புதான் இவரது இத்தனை உயரங்களுக்கு காரணம். காதல்கொண்டேன் படப்பிடிப்பு தளத்தில் 'இவனெல்லாம் ஹீரோவா?' என்று அவர் காதுபடக் கூறி சுற்றியிருக்கும் கூட்டமே சிரிக்கும்போது, விமர்சனங்களை எதிர்கொள்ளத் தெரியாத அந்த வயதில் தனுஷ் என்னவெல்லாம் யோசித்திருப்பார்.
சினிமாவே வேண்டாம் என்று கூட யோசித்திருக்கலாம். ஆனால், இன்று அவரை ஹாலிவுட் வரை கைப்பிடித்து அழைத்துச் சென்று சேர்த்திருக்கிறது காலம். சர்வதேச எல்லை கடந்து தனது நடிப்பால் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். உருவம் மட்டுமே ஒருவனை அடையாளப்படுத்தாது என்பதை நிரூபித்த பல நடிகர்களுள் இவரும் ஒருவர்.