தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

லியோ வசூலில் பங்கு சம்பந்தமான பேச்சுவார்த்தை நீட்டிப்பு - டிக்கெட் முன்பதிவில் தாமதம்! - செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ

Leo Movie: லியோ வசூலில் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இடையே பங்கு சம்பந்தமாக பேச்சுவார்த்தை நீடித்து வருவதால், சென்னையில் லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

Leo Movie
லியோ லாபத்தில் பங்கு சம்பந்தமான பேச்சுவார்த்தை நீட்டிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 2:15 PM IST

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம், லியோ. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் இணைந்து தயாரித்து உள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார். இப்படம் வருகிற 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் டிக்கெட் முன்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் புறநகர் பகுதிகள் மற்றும் சில திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய உடனே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஆனால், சென்னையில் உள்ள முக்கியமான திரையரங்குகளில் இன்னும் டிக்கெட் முன்பதிவு தொடங்கவில்லை.

ஏனென்றால், விநியோகஸ்தர்கள் அதிக அளவு பங்குத் தொகை கேட்பதால், திரையரங்குகளின் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சினிமா திரையரங்கம் வியாபாரத்தைப் பொறுத்தவரை, முக்கிய பகுதிகளில் முதல் வார வசூலில் விநியோகஸ்தர்களுக்கு என்ன சதவீதம் பங்கு மற்றும் திரையரங்க உரிமையாளருக்கு என்ன சதவீதம் பங்கு என நிர்ணயிக்கப்படும்.

அதன் பிறகு, அடுத்தடுத்த வாரங்களில் இருவருக்கும் என்ன பங்கு என்பது உள்ளிட்ட விபரங்கள் விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் பேசி ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டு, வியாபாரம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், லியோ படத்தின் சென்னை விநியோகஸ்தர் நிறுவனமான கற்பக விநாயகா நிறுவனத்திற்கும், சென்னை பகுதியில் இருக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதில் விநியோக நிறுவனம், முதல் வார திரையரங்க வசூலில் தங்களுக்கு 75 சதவீதம் வரை பங்கு வழங்க வேண்டும் எனவும், ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் 60 சதவீதத்துக்கு மேல் தர முடியாது என்றும் கூறி வருகின்றனர். இதன் காரணமாக லியோ திரைப்படத்திற்கான சென்னை திரையரங்குகள் ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டாமல் உள்ளது. இதன் காரணமாகவே லியோ திரைப்படத்தின் சென்னை டிக்கெட் முன்பதிவு இன்னும் இணையதளத்தில் தொடங்கவில்லை.

லியோ படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முன்பதிவு தொடங்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், ரெட் ஜெயன்ட் நிறுவனம் திரைப்படங்களை வெளியிடும்போது திரையரங்கு வசூலில் விநியோகஸ்தர்களுக்கு 75 சதவீதம் பங்கு வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அஜித் படங்களின் கலை இயக்குநர் மிலன் காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details