தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சிபிஐ தலைவர் முத்தரசன் நடிக்கும் 'அரிசி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! - இயக்குநர் பாரதிராஜா

CPI Mutharsan: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விவசாயியாக நடிக்கும் 'அரிசி' படத்தின்‌ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ளார்.

சிபிஐ மாநில செயலாளர் இரா முத்தரசன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சிபிஐ மாநில செயலாளர் இரா முத்தரசன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 8:06 PM IST

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன், இயக்குநர் S.A.விஜயகுமார் இயக்கத்தில், மோனிகா புரடக்‌ஷன் சார்பில் P.சண்முகம் தயாரிக்கும் படம் 'அரிசி'. குறிப்பாக இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில், இரா.முத்தரசன் விவசாயி கதாபாத்திரத்தில் நடிக்க, அவரின் மனைவி கதாபாத்திரத்தில் ரஷ்யா மாயன் நடித்து வருவதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 'அரிசி' படத்தில் ஜான்சன் ஒளிப்பதிவு பணிகளையும், அசோக் சார்லஸ் படத்தொகுப்பு பணிகளையும், சேது ரமேஷ் கலை இயக்குநர் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இப்படத்தில் சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன், அன்பு ராணி, சுபா, பழனி மணிசேகரன், கொண்டை மண்டை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 'அரிசி' படத்தின் இயக்குநர் S.A.விஜயகுமார், பிரபல இயக்குநர்கள் பலரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

மேலும் 'அரிசி' படம் குறித்து படத்தின் இயக்குநர் S.A.விஜயகுமார், இப்படம் முழுக்க முழுக்க விவசாய பின்னணியில் உருவாகும் படம் என்றும், அரிசி என்பது மனித வாழ்வியலின் உயிர் நாடி என்பதனை எடுத்து சொல்லும் விதத்தில் இருக்கும் என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க: இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்.. அடுத்தாண்டு படப்பிடிப்பு தொடக்கம்!

முன்னதாக, கும்பகோணம் அடுத்த குடவாசல் அருகே உள்ள கிராமங்களில் 'அரிசி' படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பு தளங்களில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டன. மேலும் 'அரிசி' படம் குறித்து இரா.முத்தரசன் கூறும் போது, படத்தின் ஒவ்வொரு வசனங்களும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும் எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை, இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ளார். அப்பதிவில் படத்தில் நடித்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசனுக்கும், 'அரிசி' படக் குழுவினர்களுக்கு வாழ்த்துக்களை குறிப்பிடு இருந்தார்.

மேலும் அரிசி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தில், வயல் வெளியில் இரா.முத்தரசன் விவசாயி வேடத்தில் நிற்பதை போல் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் 'அரிசி உயிரின் மறு பெயர்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது 'அரிசி' ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பலர் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "இது எங்க நிலம்... எங்க இடம்... விட்டுப்போக மாட்டோம்..." - அழுத்தமான வசனங்களுடன் கருப்பர் நகரம் டீஸர்..!

ABOUT THE AUTHOR

...view details